3502. மாயையால் வினையால் அரிபிர மாதி
வானவர் மனமதி மயங்கித்
தீயகா ரியங்கள் செய்திடில் அந்தோ
சிறியனேன் செய்வது புதிதோ
ஆயினும் தீய இவைஎன அறியேன்
அறிவித்துத் திருத்துதல் அன்றி
நீயிவண் பிறர்போன் றிருப்பது தந்தை
நெறிக்கழ கல்லவே எந்தாய்.
உரை: மாயை மயக்கத்தாலும் வினை வகையாலும், திருமால் பிரமன் முதலிய தேவர்களே அறிவு மயங்கித் தீய காரியங்களைச் செய்வார்களாயின், ஐயோ, அறிவால் சிறியவனாகிய நான் செய்வது புதுமையாகுமோ? ஆயினும் நான் செய்தவற்றுள் தீயவை இவையென்று நான் அறியேன்; எனக்கு அவற்றைக் காட்டித் திருத்துவதை விடுத்துப் பெருமானாகிய நீ இவ்விடத்தே அயலார் போன்று இருப்பது தந்தையாம் முறைமையையுடைய உனக்கு நன்னெறி யாகாது; அழகுமாகாது. எ.று.
மாயை - காம வெகுளிகளைத் தூண்டும் மயக்க வகை. வினையும் அறிவை மயக்குமாகலின், “வினையால்” என விளம்புகின்றார். வானவர் - தேவர். தீய காரியங்கள் - தவறான செயல்கள். மக்களினும் உயர்ந்தவர்களாதலின் தேவர்களை எடுத்தோதி அவர்கள் மாயை, கன்மங்களால் மயங்குவாராக, மக்களினத்தில் அறிவால் சிறுமை யுடையவனாகிய நான் மயங்கிக் குற்றங்களைச் செய்வது வியப்பாகாது; இதனைப் பொறுத் தருளல் வேண்டுமென்று முறையிடுவாராய், “வானவர் மனமதி மயங்கித் தீய காரியங்கள் செய்திடில் அந்தோ சிறியனேன் செய்வது புதிதோ” என வுரைக்கின்றார். செய்த பிழைகளை எடுத்துக் காட்டித் திருந்தும் இயல்புடையவன் எனத் தம்மை யுணர்த்துவார், தீய இவை யென அறியேன் அறிவித்துத் திருத்துதல் அன்றி” திருத்தாமல் அயலார் போன்றிருப்பது முறையாகாது என்றற்கு, “நீ யிவண் பிறர் போன்றிருப்பது தந்தை நெறிக்கு அழகல்லவே எந்தாய்” என்று கூறுகின்றார். “திருத்தி திருத்தி வந்து என் சிந்தை இடங்கொள் கயிலாயா” (துருத்தி) என நம்பியாரூரர் கூறுவது காண்க.
இதனால், தீயவை செய்திடில் திருத்துதலைக் கைவிட்டு வருத்துவது முறையாகாது என விண்ணப்பித்தவாறாம். (93)
|