3503. கருணையும் சிவமே பொருள்எனக் காணும்
காட்சியும் பெறுகமற் றெல்லாம்
மருள்நெறி எனநீ எனக்கறி வித்த
வண்ணமே பெற்றிருக் கின்றேன்
இருள்நெறி மாயை வினைகளால் கலக்கம்
எய்திய தென்செய்வேன் எந்தாய்
தெருள்நிலை இன்றிக் கலங்கினேன் எனினும்
சிறுநெறி பிடித்ததொன் றிலையே.
உரை: எந்தையாகிய சிவபெருமானே, உயிர் இரக்கமும் சிவமுமே உறுதிப் பொருள் என்னும் அறிவு பெறுக; மற்றவை யாவும் மயக்க நெறி என அறிவித்த வண்ணமே அறிவுற்றிருக்கின்றேன்; குற்ற நெறியைக் காட்டும் மாயை கன்மங்களால் என் அறிவின்கண் கலக்கம் உண்டாகிறது; செய்வதறியாது வருந்துகிறேன்; தெளிந்த அறிவு பெறாது கலக்கமுற்றே னெனினும், தவறான கீழ்மை நெறியை யான் கைக்கொண்டதில்லை, காண். எ.று.
கருணை - பி்ற வுயிர்களைக் கண்டவிடத்து மனம் இரங்கும் நல்லறம். சிவம் - இன்பமே நல்கும் பரம்பொருள். காட்சி யறிவு, மருள் நெறி, மயக்கத்தைச் செய்யும் தீய நெறிகள். உயிரிரக்கப் பண்பும் சிவ நெறியுமே நன்னெறி யென்றலின், “மற்றெல்லாம் மருள் நெறி” என அறிவுறுத்துகின்றார். அந்த நல்லறத்தையே கைக்கொண்டிருப்பது தோன்ற வள்ளற் பெருமான், “அறிவித்த வண்ணமே பெற்றிருக்கின்றேன்” என வுரைக்கின்றார். உலகியல் வாழ்விற் பற்று விளைவித்து மயக்குவதாலும், வினைகள் செயற் பயனைக் காட்டி மேன்மேலும் அவற்றைச் செய்தற்கண் விழைவு தோற்றுவித்தலால், “மாயை வினைகளால் கலக்க மெய்தியது” எனவும், கையறவு விளங்க, “என் செய்வேன்” எனவும் இயம்புகின்றார். மாயையும் வினையும் முடிவில் துன்பம் எய்துவித்தலின், “இருள் நெறி” எனவும் இயம்புகின்றார். தெருள் நிலை - தெளிந்த ஞான நிலை. சிறுமையும் துன்பமும் பயக்கும் குற்ற நெறிகளைச் “சிறு நெறி” எனத் தெரிவிக்கின்றார்.
இதனால், உயிரிரக்கமும் சிவநெறியும் மேற்கொண்டு சிறுநெறியிற் சேராத தமது கொள்கையை வள்ளற் பெருமான் தெரிவித்தவாறாம். (94)
|