3504. கலங்கிய போதும் திருச்சிற்றம் பலத்தில்
கருணையங் கடவுளே நின்பால்
இலங்கிய நேயம் விலங்கிய திலையே
எந்தைநின் உளம்அறி யாதோ
மலங்கிய மனத்தேன் புகல்வதென் வினையால்
மாயையால் வரும்பிழை எல்லாம்
அலங்கும்என் பிழைகள் அல்லஎன் றுன்னோ
டடிக்கடி அறைந்தனன் ஆண்டே.
உரை: எந்தையாகிய சிவபெருமானே, என் மனமும் அறிவும் சோர்வுற்ற போதிலும் திருச்சிற்றம்பலத்தின்கண் கருணையுருவிற் காட்சி நல்கும் கடவுளாகிய நின்னிடத்து யான் வைத்த அன்பு நீங்கியதில்லை; இது தேவரீரது திருவுள்ளம் நன்கறிந்தது; மயங்கும் மனத்தை யுடையவனாகிய யான் எடுத்துரைப்பதென்னை? மாயை கன்மங்களால் என்னிடத்துண்டாகும் குற்றங்கட்கு அவைகளே காரணமாதலால், அக்குற்றங்கள் என்னுடையவை யல்ல என்று அவ்வப்போது நான் அடிக்கடி சொல்லியுள்ளேன், காண். எ.று.
கணந்தோறும் மாறும் இயல்புடைய முக்குணங்களால் அறிவும் நினைவும் கலக்கமுறுவது அறிஞர் நன்கறிந்த வுண்மையாதலின், கலங்கிய போதும்” என எடுத்துரைக்கின்றார். தில்லையிற் கூத்தப் பெருமான் திருவுரு கருணை யுருவெனத் தெரிவித்தற்குத் “திருச்சிற்றம்பலத்திற் கருணையங் கடவுளே” எனக் கூறுகின்றார். இலங்கிய நேயம், பொருந்தி விளங்கும் மெய்யன்பு. என் மனத்தின்கண் உயிர்க்குயிராய் இருந்தருளும் தேவரீர்க்கு நன்கு தெரிந்தது என்பாராய், “எந்தை நின்னுளம் அறியாதோ” என இசைக்கின்றார். மலப்பிணிப்பால் மயங்குவது பற்றி, “மலங்கிய மனத்தேன்” என வுரைக்கின்றார். அலங்குதல் - அசைதல், அறைதல் - தெரிவித்தல்.
இதனால், மாயை வினைகளால் உண்டாகும் பிழைகட்காகத் தம்மை வருத்துதல் கூடாதென வள்ளற் பெருமான் விண்ணப்பித்தவாறாம். (95)
|