3505. இரும்பினும் கொடிய மனஞ்செயும் பிழையும்
என்பிழை அன்றெனப் பலகால்
விரும்பிநின் அடிக்கே விண்ணப்பித் திருந்தேன்
வேறுநான் செய்ததிங் கென்னே
அரும்பொனே திருச்சிற் றம்பலத் தமுதே
அப்பனே என்றிருக் கின்றேன்
துரும்பினுஞ் சிறியேன் புகல்வதென் நினது
தூயதாம் திருவுளம் அறியும்.
உரை: இரும்பினும் கொடுமை யுடையதாகிய என் மனத்தால் விளையும் குற்றங்களையும் என் குற்றங்களல்ல வெனப் பலமுறையும் நின் திருவடிக்கண் முறையிட்டு அமைந்திருந்தேனே யன்றி வேறொன்றும் நான் செய்ததில்லை; பெறற்கரிய பொன் போன்றவனே, திருச்சிற்றம்பலத்தின்கண் எழுந்தருளும் அமுதமாகியவனே, எனக்குத் தந்தையே என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றேன்; சிறு துரும்பினும் சிறியவனாகிய நான் சொல்லுவதற்கு என்ன உளது; என் மனத்தில் உள்ளவற்றையெல்லாம் தூயதாகிய தேவரீரது திருவுள்ளம் நன்கு அறியும். எ.று.
எளிதில் உருகாமை பற்றி, “இரும்பினும் கொடிய மனம்” என்று சொல்லுகின்றார். தேகம் எய்தும் போதே யுடன் எய்துவதாதலின், “மனம் செய்யும் பிழையும்” என எடுத்துரைக்கின்றார். வினைக்குரிய கருவிகள் ஆகிய மனம், வாக்கு, மெய் என்ற மூன்றனுள் மனத்தால் செய்யப்படும் குற்றத்தையடுத்து, “மனம் செயும் பிழையும் என் பிழை அன்றென” என மொழிகின்றார். தன்னின் வேறாக மனத்தைப் பிரித்து உரைப்பவர் தாம் எண்ணியது கூறுவார், “அரும் பொனே திருச்சிற்றம்பலத்து அமுதே அப்பனே என்றிருக்கின்றேன்” என்று கூறுகின்றார். தமது சிறுமையும் புன்மையும் உணர்த்துதற்கு, “துரும்பினும் சிறியேன்” என உரைக்கின்றார்.
இதனால், மனமாகிய அந்தக்கரணம் செய்யும் குற்றத்தையும் தனதன்று எனவள்ளற் பெருமான் கருதியவாறு தெரிவித்தவாறாம். (96)
|