3506.

     வருமுயிர் இரக்கம் பற்றியே உலக
          வழக்கில்என் மனஞ்சென்ற தோறும்
     வெருவிநின் அடிக்கே விண்ணப்பித் திருந்தேன்
          விண்ணப்பஞ் செய்கின்றேன் இன்றும்
     உருவஎன் உயிர்தான் உயிர்இரக் கந்தான்
          ஒன்றதே இரண்டிலை இரக்கம்
     ஒருவில்என் உயிரும் ஒருவும்என் உள்ளத்
          தொருவனே நின்பதத் தாணை.

உரை:

     தோன்றுகின்ற உயிர்களின்பால் இரக்கம் கொள்வது பற்றி உலகியல் வழக்கில் என் மனம் சென்ற போதெல்லாம் மிக்க அச்சத்தோடே நின் திருவடிக்கே விண்ணப்பம் செய்தேன்; இப்போதும் விண்ணப்பம் செய்கின்றேன்; அருவுருவினதாகிய என்னுயிர் வேறு, உயிரிரக்கம் வேறு என எனக்கு இரண்டில்லை; இரக்கப் பண்பு என்னிடத்தில் நீங்குமாயின் என்னுயிரும் நீங்கி விடும்; என்னுள்ளத்தில் எழுந்தருளும் ஒப்பற்ற பெருமானே, இது உன் திருவடி ஆணையாக மொழிவதாகும். எ.று.

     உயிர்களின்பால் இரக்கமுற்றுத் தகுவன உதவுதற்கு என்றே உயிர் வாழ்கின்றவராதலால் அவற்றின்பால் நினைவு செல்லும் போதெல்லாம் தவறு நேர்ந்து விடுமோ என்ற அச்சத்தோடு பணி புரிந்தாராதலால், “உலக வழக்கில் என் மனம் சென்ற தோறும் வெருவி நின்னடிக்கே விண்ணப்பித்திருந்தேன் விண்ணப்பம் செய்கின்றேன் இன்றும்” என விளம்புகின்றார். உயிர் இரக்கம் ஒன்றே கருதித் தாம் உயிர் வாழ்கின்றார் என்பதை வற்புறுத்துதற்கு, “உருவ என்னுயிர்தான் உயிரிரக்கம் தான் ஒன்றதே இரண்டிலை” என்றும், “இரக்கம் ஒருவில் என்னுயிரும் ஒருவும் என்னுள்ளத் தொருவனே நின் பதத்தாணை” என்றும் உரைக்கின்றார்.

     இதனால், உயிரிரக்கம் வேறு தான் வேறு என இரண்டாகாமை விளக்கியவாறாம்.

     (97)