3507. தலைவர்கள் எல்லாம்த னித்தனி வணங்கும்
தலைவனே இன்றும்என் உளமும்
மலைவில்என் அறிவும் நானும்இவ் வுலக
வழக்கிலே உயிர்இரக் கத்தால்
இலகுகின் றனம்நான் என்செய்வேன் இரக்கம்
என்னுயிர் என்னவே றிலையே
நிலைபெறும் இரக்கம் நீங்கில்என் உயிரும்
நீங்கும்நின் திருவுளம் அறியும்.
உரை: தலைவராயினார் யாவரும் தனித்தனியாக நின்று தொழுது வணங்கும் தலைமை முதல்வனே; இப்பொழுதும் என் மனமும் தெளிந்த என்னறிவும் நானும் இவ்வுலக வாழ்வில் கலந்து உயிரிரக்கம் ஒன்றே செய்பணியாகக் கொண்டு விளங்குகின்றோம்; இந்த இயைபுக்கு நான் செய்யலாவது ஒன்றுமில்லை; இரக்கம் வேறு என்னுயிர் வேறு எனப் பிரிதற்கு இல்லை; என்னுள் நிலைபெறுகின்ற இரக்கம் நீங்கில் என்னுயிரும் நீங்கும்; இதனைத் தேவரீரது திருவுள்ளம் நன்கு அறியும். எ.று.
“தொழப்படும் தேவர் தொழப்படுவான்” எனத் திருநாவுக்கரசர் முதலிய சான்றோர் கூறுதலால், “தலைவர்கள் எல்லாம் தனித்தனி வணங்கும் தலைவனே” என்று போற்றுகின்றார். மலைவு - கலக்கம். மனமும் அறிவும் தானுமாக ஒன்றியிருந்து உலகியல் செயல் முறையில் கலந்து வாழ்வது உயிர் இரக்கமாகிய அருள் அறத்தின் பொருட்டே என்பதை யாப்புறுத்தற்கு, “மலைவில் என்னறிவும் நானும் இவ்வுலக வழக்கிலே உயிர் இரக்கத்தால் இலகுகின்றனம்” என இயம்புகின்றார். இக்கொள்கை தமக்கு உண்டானதற்குக் காரணம் காணமாட்டாமையின் “நான் என்செய்வேன்” எனவும், “இரக்கம் என்னுயிர் என்ன வேறிலையே” எனவும் விளம்புகிறார். இரக்கப் பண்பு உயிரோடே ஒன்றி விலக்கற நிற்றல் தோன்ற, “நிலைபெறும் இரக்கம் நீங்கில் என்னுயிரும் நீங்கும்” எனத் தெளிவிக்கின்றார்.
இதனால், இரக்கப் பண்புக்கும் தமக்குமுள்ள தொடர்பு சொல்லியவாறாம். (98)
|