3508.

     ஆதலால் இரக்கம் பற்றிநான் உலகில்
          ஆடலே அன்றிஓர் விடயக்
     காதலால் ஆடல் கருதிலேன் விடயக்
          கருத்தெனக் கில்லைஎன் றிடல்இப்
     போதலால் சிறிய போதும்உண்ட டதுநின்
          புந்தியில் அறிந்தது தானே
     ஈதலால் வேறோர் தீதென திடத்தே
          இல்லைநான் இசைப்பதென் எந்தாய்.

உரை:

     ஆகவே உயிரிரக்கம் பற்றி நான் உலகியல் வாழ்வில் கலந்து இயல்கின்றேனே யன்றிக் கண், காது முதலிய பொறி புலன்கள் தோற்றுவிக்கும் ஆசையால் வாழ விரும்புகின்றேனில்லை; பொறி புலன் மேல் செல்லும் ஆசையும் எனக்கில்லை; இதனை நான் உரைப்பது இப்பொழுதில் அன்று; எனது சிறிய பருவத்திலேயே உண்டு; அதுவும் தேவரீரது திருவுளம் அறிந்ததாகும்; இது தவிர வேறு குற்றம் என்பால் இல்லை; இதை நான் எல்லாம் அறிந்த உனக்கு எடுத்துரைப்பது வேண்டாததாகும் எ.று.

     பொறி புலன்கள் செய்யும் ஆசையால் உலகியல் வாழ்வு விரிந்து பரந்து நடைபெறுகின்றதாதலால், அதனின் விலகி இருக்கும் வள்ளற் பெருமானது உண்மைக் கருத்தைப் புலப்படுத்தற்கு, “இரக்கம் பற்றி நான் உலகில் ஆடலேயன்றி ஓர் விடயக் காதலால் ஆடல் கருதிலேன் விடயக் கருத்து எனக்கில்லை” என்று விளம்புகிறார். விடயம் - கண் காது முதலிய பொறி புலன்கள் மேற் செல்லும் ஆசை. விடய ஆசை சிவனுக்கு இல்லையாதலால் அவனுடைய அடியார்பாலும் அஃது இல்லையாயிற்று “பொறி வாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறி நின்றார் நீடு வாழ்வார்” என்று சான்றோரும் கூறுதல் காண்க. பொறிவாயில் ஆசையாகிய விடயங்களை விரும்பாது ஒழுகும் திறம் இளம்பிள்ளைப் பருவத்தேயே இல்லையாயிற்று என்பது புலப்பட, “இப்போதலால் சிறிய போதும் உண்டது நின் புந்தியில் அறிந்தது” என்று கூறுகின்றார். புந்தி - மனம். ஒருகால் இவ்விரக்கப் பண்பு தீதெனக் கூறப்படுமாயினும் அதனை ஒழிய வேறு தீதுகளை உடையவனாகேன் எனத் தான் வேண்டிய கருத்தை வலியுறுத்தற்கு, “ஈதலால் வேறோர் தீது எனது இடத்தேயில்லை நான் இசைப்பது என்” என இசைக்கின்றார். உயிரிரக்கம் ஒருகாலும் தீதெனப்படாதது அறிக. அதனைச் சான்றோர் “அருள் அறம்” எனப் போற்றுவர்.

     இதனால், உயிரிரக்கப் பண்பு குற்றமாயினும் அஃதொழிய ஏனைக் குற்றங்களை உடையவனாகேன் என வற்புறுத்தவாறாம்.

     (99)