3509. என்னையும் இரக்கந் தன்னையும் ஒன்றாய்
இருக்கவே இசைவித் திவ்வுலகில்
மன்னிவாழ் வுறவே வருவித்த கருணை
வள்ளல்நீ நினக்கிது விடயம்
பன்னல்என் அடியேன் ஆயினும் பிள்ளைப்
பாங்கினால் உரைக்கின்றேன் எந்தாய்
இன்னவா றெனநீ சொன்னவா றியற்றா
திருந்ததோர் இறையும்இங் கிலையே.
உரை: எளியேனையும் உயிரிரக்கப் பண்பினையும் ஒன்றாய் இயைவித்து இவ்வுலகில் நின்று வாழ்தற் பொருட்டு என்னைத் தோற்றுவித்த அருள் வள்ளல் நீயாவாய்; நினக்கு அடியவனாகிய நான் சொல்லுதல் வேண்டா; ஆயினும் நினக்கு மகன் என்ற முறைமையினால் நின் திருமுன் எடுத்துரைக்கின்றேன்; இவ்வாறு செய்க என நீ சொன்னபடி ஒருசிறிதும் இவ்வுலகில் செய்யாது இருந்ததில்லை யான். எ.று.
பொருளையும் அதன் பண்பையும் பிரித்தலாகாது என்ற முறைமை பற்றி, “என்னையும் இரக்கம் தன்னையும் ஒன்றாய் இருக்கவே இசைவித்து மன்னி வாழ்வுறவே வருவித்த கருணை வள்ளல் நீ” என வுரைக்கின்றார். பண்பும் அதனையுடைய பொருளும் பிரிக்க வாராதவாறு அமைவது இறைவன் படைப்பு என்பது இதனால் உணரப்படும். மன்னுதல் - நிலைபெறுதல். இவ்விடயம் என்பது இது விடயம் என வந்தது. இதனைப் பொருளொடு புணராச் சுட்டு என்பர். பன்னல் - சொல்லுதல். பிள்ளைப் பாங்கு - மகன்மை முறை. வேண்டாவிடினும் தந்தைக்கு மகன் கூறுவது போலத் தான் கூறுவது ஏற்கற்பாலது என்பது கருத்து. தமது வாழ்வில் இறைவன் ஆணைக்கு மாறாகத் தாம் ஒரு செயலும் செய்ததில்லை யென்பாராய், “இன்னவா றென நீ சொன்னவாறு இயற்றாது இருந்ததோர் இறையும் இங்கிலையே” என மொழிகின்றார். இறை - சிறிதும்.
இதனால், இறைவன் ஆணை வழி நின்று அவன் சொன்னவாறு செய்வதே வாழ்வு என வள்ளற் பெருமான் கருதி ஒழுகிய திறம் கூறியவாறாம். (100)
|