3510. உறுவினை தவிர்க்கும் ஒருவனே உலகில்
ஓடியும் ஆடியும் உழன்றும்
சிறுவர்தாம் தந்தை வெறுப்பஆர்க் கின்றார்
சிறியனேன் ஒருதின மேனும்
மறுகிநின் றாடி ஆர்த்ததிங் குண்டோ
நின்பணி மதிப்பலால் எனக்குச்
சிறுவிளை யாட்டில் சிந்தையே இலைநின்
திருவுளம் அறியுமே எந்தாய்.
உரை: மிக்க செயல்களாகிய குற்றத்தை நீக்கும் ஒப்பற்ற பெருமானே; உலகில் சிறியவராயினார் தம்மைப் பெற்ற தந்தை மனம் வெறுக்கும்படி இங்குமங்கும் ஓடியும் ஆடியும் வருந்தியும் ஆராவாரம் செய்கின்றனர்; சிறியவனாகிய யான் ஒருநாளும் மனம் மயங்கி நின்று இங்குமங்கும் ஆடி ஆரவாரம் செய்ததில்லை; நினது திருப்பணியை நெஞ்சிற் கொள்ளுவதன்றி என் சிந்தை சிறு விளையாட்டுக்களில் சென்றது கிடையாது; இதனை தேவரீரது திருவுள்ளம் நன்கு அறியும். எ.று.
உறுவினை - மிக்க செயல். நற் செயலாயினும் தீச்செயலாயினும் அளவுக்கு மிக்க வழிக் குற்றமாய் விடுதலின், அக்குற்றத்தையும் பொறுக்கும் இயல்பு பற்றிச் சிவபெருமானை, “உறுவினைத் தவிர்க்கும் ஒருவனே” என உரைக்கின்றார். உலகில் தந்தை தாயர்களை மகிழ்விக்கும் சிறுவர்கள் பல சமயங்களில் அவர்கள் வெறுக்கும்படி மிகைபட ஓடி யாடி விளையாடுவது இயற்கையாதலின், அதனை “உலகில் ஓடியும் ஆடியும் உழன்றும் சிறுவர்தாம் தந்தை வெறுப்ப ஆர்க்கின்றார். என்று கூறுகின்றார். தான் அவ்வாறு ஆடியதில்லை என்பதனை, “சிறியனேன் ஒரு தினமேனும் மறுகி நின்றாடி ஆர்த்ததிங் குண்டோ” என்று கூறுகின்றார். மறுகி நின்றாடி என்பதை மறுகில் நின்றாடி என்று பாடங் கொண்டு தெருக்களில் நின்று விளையாடி எனப் பொருள் கொள்வதும் உண்டு. பெரியோர்க்கு அடங்கி யொழுகுதல் வேண்டும் என்பது இளமையிற் கற்பிக்கும் நல்லறங்களில் ஒன்றாதலால் அதனை இளமையிலேயே மேற்கொண்டு ஒழுகிய திறத்தை, “நின் பணி மதிப்பலால் எனக்குச் சிறு விளையாட்டில் சிந்தையே இலை” எனத் தெரிவிக்கின்றார். அடங்கி ஒழுகுதல் முதலியன சிவப்பணி என மேற் கொண்டமை புலப்பட, “நின்பணி மதிப்பலால்” எனக் குறிக்கின்றார். சிறு விளையாட்டு - சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு. சிவஞானப் பணி யல்லாத பிறவற்றைச் சிறு விளையாட்டு என்றலும் உண்டு.
இதனால், வள்ளற் பெருமானுக்குப் பிள்ளைப் பருவத்தேயே சிவப்பணியில் சிந்தை ஊன்றி நின்றமை தெரிவித்தவாறாம். (101)
|