3511.

     தந்தையர் வெறுப்ப மக்கள்தாம் பயனில்
          சழக்குரை யாடிவெங் காமச்
     சிந்தைய ராகித் திரிகின்றார் அந்தோ
          சிறியனேன் ஒருதின மேனும்
     எந்தைநின் உள்ளம் வெறுப்பநின் பணிவிட்
          டிவ்வுல கியலில்அவ் வாறு
     தெந்தன என்றே திரிந்ததுண் டேயோ
          திருவுளம் அறியநான் அறியேன்.

உரை:

     பெருமானே, பெற்ற தந்தையாரின் மனம் வெறுக்கும்படி மக்களாயினார் பயனில்லாத வெற்றுரைகளைப் பேசி வெவ்விய காம நினைவுகளை யுடையவராய்த் திரிகின்றார்கள்; ஐயோ, சிறியவனாகிய யான் ஒரு நாளேனும் எந்தையாகிய உனது திருவுள்ளம் வெறுக்குமாறு நினக்குரிய திருப்பணியைச் செய்வதை விடுத்து இவ்வுலகில் மனம் போனபடி உழன்றதில்லை; இதனைத் தேவரீர் திருவுள்ளம் அறிய நான் அறிகிலேன். எ.று.

     தாம் பெற்ற மக்கள் பயனில்லாத பேச்சுக்களில் ஈடுபட்டுக் காமக் களிப்புடைய நினைவுடையராய்ப் பேசித் திரிவதை விரும்புவ தில்லை யாதலால், “தந்தையர் வெறுப்ப மக்கள்தாம் பயனில் சழக்குரையாடி வெங்காமச் சிந்தையராகித் திரிகின்றார்” என்று உரைக்கின்றார். பயனில்லாதவற்றைப் பேசுதலும் செய்தலும் குற்றமாதலாலும் அவற்றைப் “பயனில் சழக்குரை” எனக் கூறுகின்றார். காம நினைவு சிந்தையைக் கெடுத்தலின், “வெங்காமச் சிந்தையராகித் திரிகின்றார்” என்று குறிக்கின்றார். காமச் சிந்தையர் என்பதால் இப்பாட்டில் நினைக்கப்படும் மக்கள் பிள்ளைப் பருவம் கடந்து வாலப்பருவம் எய்தினவர் என்பது பெறப்படும். அவர்களைப் பற்றி இரக்கப்படுகின்றாராதலின், ‘அந்தோ’ என மொழிகின்றார். அவர்களுடைய பயனில் சழக்குரைகளும் காம நினைவுகளும் இவ்வுலகியற்கு ஒத்தனவாதலால், “இவ்வுலகியலில் நான் அவ்வாறு திரிந்த துண்டோ” என்று வினவுகின்றார். தெந்தன எனத் திரிதல் - நிலை தடுமாறித் திரிதல்

     இதனால், வள்ளற் பெருமான் வாலப் பருவத்தும் சிவப் பணியிலேயே ஊன்றிய சிந்தையராய் இருந்தது தெரிவித்தவாறாம்.

     (102)