3512. அம்புவி தனிலே தந்தையர் வெறுப்ப
அடிக்கடி அயலவர் உடனே
வம்புறு சண்டை விளைக்கின்றார் சிறுவர்
வள்ளலே நின்பணி விடுத்தே
இம்பர்இவ் வுலகில் ஒருதின மேனும்
ஏழையேன் பிறரொடு வெகுண்டே
வெம்புறு சண்டை விளைத்ததுண் டேயோ
மெய்யநின் ஆணைநான் அறியேன்.
உரை: மண்ணுலகில் பெற்ற தந்தையர் மனம் வெறுக்கும்படி அயலாருடன் அடிக்கடி புதுப்புதுச் சண்டைகளைச் சிறுவர்கள் தொடுக்கின்றார்; வள்ளற் பெருமானாகிய நினது அருட் பணியைக் கைவிட்டு இங்கே இவ்வூரில் ஒருநாளேனும் ஏழையாகிய யான் மற்றவர்களுடன் கோபித்து மிக்குறும் சண்டை செய்தது கிடையாது; மெய்யவனாகிய நின்மேல் ஆணையாக அறிகிலேன். எ.று.
“தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” யாதலின் “தந்தையர் வெறுப்ப” என மொழிகின்றார். வம்பு - புதுமை. புதுப்புதுக் காரணம் கண்டு சண்டை தொடுப்பது பற்றி, “வம்புறு சண்டை” என வுரைக்கின்றார். பணி - ஈண்டுச் சிவபூசை மேலும், சைவ நூலாராய்ச்சி மேலும், உயிரிரக்கச் செயல் மேலும் நின்றது. இம்பர் - இங்கு. உலகு என்றது ஊர்களைக் குறித்து நிற்கிறது. சினத் தீயை மேன்மேலும் கிளர்விப்பது பற்றி, “வெம்புறு சண்டை” என விதக்கின்றார். தமது உரையின் மெய்ம்மையை வலியுறுத்தற்கு, “மெய்ய நின் ஆணை” என விளம்புகின்றார்.
இதனால், வள்ளற் பெருமான் சிறு பிள்ளைப் பருவத்தும் வம்புச் சண்டைகளில் ஈடுபட்ட தில்லை எனத் தெரிவிந்தவாறாம். (103)
|