3513. வள்ளல்இவ் வுலகில் தந்தையர் வெறுப்ப
மக்கள்தாம் ஒழுக்கத்தை மறந்தே
கள்ளருந் துதல்சூ தாடுதல் காமக்
கடைதொறும் மயங்குதல் பொய்யே
விள்ளுதல் புரிவார் ஐயகோ அடியேன்
மெய்யநின் திருப்பணி விடுத்தே
எள்ளிஅவ் வாறு புரிந்ததொன் றுண்டோ
எந்தைநின் ஆணைநான் அறியேன்.
உரை: அருள் வள்ளலாகிய சிவனே, இவ்வுலகில் தந்தையர் மனம் வெறுக்குமாறு மக்களாயினார் தமக்குரிய நல்லொழுக்கத்தை விடுத்துக் கட் குடித்தல், சூதாடுதல், காமக் கூட்டமாகிய இழிசெயலில் ஈடுபடுதல், பொய் பேசுதல் ஆகியவற்றைச் செய்வதுண்டு; ஐயோ, நினக்கு அடிமையாகிய யான் மெய்ம்மையாளனாகிய நினக்குரிய அறப்பணிகளை இகழ்ந்து கைவிட்டு அவ்வாறு அறிவறியச் செய்ததில்லை; எந்தையாகிய நின்மேல் ஆணை. எ.று.
ஒழுக்கம் எனப் பொதுப்பட மொழிந்தமையால் நல்லொழுக்கம் பொருளாகக் கொள்ளப்படுவதாயிற்று. காம விச்சைக்கான செயல்கள் “காமக் கடை தொறும் மயங்குதல்” எனப்படுகிறது. காமக் கடை - காம மகளிர் வீடு; விபசார விடுதி என்றுமாம். மயங்குதல் - கூடுதல். விள்ளுதல் பேசுதல். திருப்பணி எள்ளி விடுத்து என இயையும். எள்ளுதல் - இகழ்தல்.
இதனால், இளமைக் காலத்தில் வள்ளற் பெருமான் கள்ளுண்டல் முதலிய தீ யொழுக்கங்களை மேற்கொண்டதில்லையென விளம்பியவாறாம். (104)
|