3514. மலைவிலாத் திருச்சிற் றம்பலத் தமர்ந்த
வள்ளலே உலகினில் பெற்றோர்
குலைநடுக் குறவே கடுகடுத் தோடிக்
கொடியதீ நெறியிலே மக்கள்
புலைகொலை களவே புரிகின்றார் அடியேன்
புண்ணிய நின்பணி விடுத்தே
உலையஅவ் வாறு புரிந்ததொன் றுண்டோ
உன்பதத் தாணைநான் அறியேன்.
உரை: மலைத்தற் கிடமில்லாத திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளும் அருள் வள்ளலாகிய சிவபெருமானே! உலகில் பெற்ற தாய்தந்தையர் கண்டு குலை நடுங்குமாறு கடுகடுப்புடன் சென்று கொடுமை பொருந்திய தீய வழிகளை மேற் கொண்டு மக்களாயினார் உயிர்க்கொலையும் புலாலுண்டலும் களவு புரிதலும் செய்கின்றனர்; அடியவனாகிய யான் புண்ணிய மூர்த்தியாகிய நினது அருட் செயலைக் கைவிட்டு மனம் வருந்துமாறு அத்தகைய தொழில்களை நான் செய்த துண்டோ? உன் திருவடி யாணையாக நான் செய்தறியேன். எ.று..
மலைதல் - ஐயம் திரிபுகளால் அறிவு மயங்குதல். குலை - வயிற்றிலுள்ள கருவிகளி லொன்று; மனத்தின்கண் மிக்க அச்ச முண்டாகும் போது வயிற்றுக்குள் இக்குலை யறுப்பு மிகவும் துடிப்பது பற்றி, “குலை நடுக்குற” எனக் கூறுகின்றார். புலை - புலால் உண்டல். கொலை - பிற வுயிர்களைக் கொல்லுதல். களவு - இது திருட்டு எனப்படும். பிறர்க்குரிய பொருளை அவரை யறியாமே எடுத்துக் கொள்ளுதல். உலைதல் - வருந்துதல்.
இதனால், வள்ளற் பெருமான் புலை, கொலை, களவு முதலிய குற்றங்களைச் செய்யாமை தெரிவித்தவாறாம். (105)
|