3515.

     தனிப்பெருஞ் சோதித் தந்தையே உலகில்
          தந்தையர் பற்பல காலும்
     இனிப்புறு மொழியால் அறிவுற மக்கட்
          கேற்கவே பயிற்றிடுந் தோறும்
     பனிப்புற ஓடிப் பதுங்கிடு கின்றார்
          பண்பனே என்னைநீ பயிற்றத்
     தினைத்தனை யேனும் பதுங்கிய துண்டோ
          திருவுளம் அறியநான் அறியேன்.

உரை:

     ஒப்பற்ற பெரிய சோதி வடிவான தந்தையாகிய சிவனே இவ்வுலகில் தந்தையராயினார் பலமுறையும் இனிய சொற்களால் நல்லறிவுண்டாதற் பொருட்டுத் தம்முடைய மக்களுக்கு மனம் கொள்ளுமாறு கல்வி பயிற்றுவிக்கவும், அவரது உள்ளம் துடிக்கும்படி வெளியே ஓடிப் பதுங்கி விடுகின்றார்கள்; நற்பண் புருவாய சிவனே, எனக்கு நீ யுணர்வு நல்குங்கால் தினையளவேனும் யான் ஒதுங்கிப் பதுங்கிய துண்டோ; ே­தவரீருடைய திருவுளம் அறிய நான் பதுங்கிய தில்லை யன்றோ. எ.று.

     சுடர் விடும் அருட் பெருஞ் சோதி வடிவினனாதலாற் சிவனை, “தனிப் பெருஞ் சோதித் தந்தையே” எனக் குறிக்கின்றார். கல்வி யறிவு நல்கும் உரிமை பெற்றவனாதலின், “தந்தையர் பலகாலும் இனிப்புறு மொழியால் அறிவுற மக்கட்கு ஏற்கவே “பயிற்றிடுந் தோறும்” எனப் பகர்கின்றார்.பலகாற் பயிலுதல் பிழையறும் நெறியாதலாற் “பலகாலும்” எனவும் வன்சொல்லினும் இன்சொல் கேட்போர் மனத்தை மகிழ்விக்கும் இயல்பினதாகலின், “இனிப்புறு மொழியால்” எனவும், “அறிவுடையார் எல்லாம் உடையார்” (குறள்) எனச்சான்றோர் உரைத்தலின், “அறிவுற” எனவும், கேட்போர் ஏற்கவுரையாமை அறிவு நெறியன்றாகலின், “ஏற்கவே பயிற்றிடுந் தோறும்” எனவும் இயம்புகின்றார். இவ்வாற்றால் கற்பித்த வழிக் கேட்போர் கேளா தொழியாராயினும், சிலர் கேளாது கெடுகின்றார்கள் என்றற்குப் “பனிப்புற வோடிப் பதுங்கிடுகின்றார்” என்று பகர்கின்றார். பனித்தல் - நடுங்குதல். பதுங்குகின்றார் என்பது இடு வென்னும் சாரியை பெற்றும் பதுங்கிடுகின்றார் என வந்தது; சொல்கின்றார் என்பது சொல்லிடுகின்றார் என வருதல் போல. பண்பன், நற்பண்பே திரண்டு உருவாயது போன்றவன். தினை - சிறிதளவு. “தினைத்துனை” (குறள்) என்றாற்போல. ே­தவரீர் திருவுள்ள மறிய நான் அக்குற்றத்தைப் புரிந்ததில்லை என்றற்கு, “திருவுள மறிய நான் அறியேன்” என இயம்புகின்றார்.

     இதனால், அறிவுப் பேற்றிக்கண் அயர்கின்ற குற்றத்தை வள்ளற் பெருமான் புரியாமை எடுத்துப் புகன்றவாறாம்.

     (106)