3516.

     தன்னைநே ரில்லாத் தந்தையே உலகில்
          தந்தையர் தங்களை அழைத்தே
     சொன்னசொல் மறுத்தே மக்கள்தம் மனம்போம்
          சூழலே போகின்றார் அடியேன்
     என்னைநீ உணர்த்தல் யாதது மலையின்
          இலக்கெனக் கொள்கின்றேன் அல்லால்
     பின்னைஓர் இறையும் மறுத்ததொன் றுண்டோ
          பெரியநின் ஆணைநான் அறியேன்.

உரை:

     தனக்கு ஒப்பாக யாருமில்லாத தந்தையாகிய சிவபெருமானே, மக்களாகிய தங்களை நேரில் அழைத்துத் தந்தையர் சொன்ன சொற்களை மறுத்து தம்முடைய மனம்போன போக்கிலே போகின்றார்கள்; அடியனாகிய யான் நீ உயிர்க்குயிராய் நின்று உணர்த்துவது யாதோ அதனையே மலையிலக்காகக் கொண்டு ஒழுகுவதன்றி, வேறு ஒருசிறிதும் மறுத் தொழுகியதில்லை; பெரிய பெருமானாகிய நினது ஆணையாக வேறு நான் அறியேன். எ.று.

     ஒப்பொருவரில்லாதான் என உயர்ந்தோர் ஓதுதல் பற்றி “தன்னை நேரில்லாத் தந்தை” என்று புகழ்கின்றார். முறைமை காட்டற்குத் “தந்தை” எனக் குறிக்கின்றார். ஒன்றனைச் செய்க எனப் பணிக்குமிடத்து நேர்முகமாக வருவித்துரைப்பது மறுக்க வொண்ணாத வன்மை யுடையதாகலின், “தங்களை யழைத்ே­த சொன்ன சொல்” எனக் கூறுகின்றார். மனம் போன சூழல், மனம் சென்றவிடம்; போன போக்குமாம். மனம் போன போக்கில் ஒழுகுவது குற்றமாய்த் தீது விளைக்கும் என்பது கருத்து. நேரில் உரைத்தலின்றி உயிர்க்குயிராய் உண்ணின்று உணர்த்துவது பற்றி, “நீ யுணர்த்தல் யாது அது” என மொழிகின்றார். “நானேது மறியாமே என்னுள் வந்து நல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய்”(ஆனைக்கா) என நாவுக்கரசர் முதலியோர் நவில்வது காண்க. மலை யிலக்கு - அசைவில்லாத குறிக்கோள். இறையும் - சிறிதும். பெரியன் - பெரிய என அண்மை விளி கொண்டது.

     இதனால், இறைவன் உணர்த்தும் உணர்வு வழி ஒழுகிய திறம் உரைத்தவாறாம்.

     (107)