3517.

     போற்றுவார் போற்றும் புனிதனே மக்கள்
          பொருந்துதம் தந்தையர் தமையே
     வேற்றுவாழ் வடைய வீடுதா பணந்தா
          மெல்லிய சரிகைவத் திரந்தா
     ஏற்றஆ பரணந் தாஎனக் கேட்டே
          இரங்குவார் இவைகுறித் தடியேன்
     தேற்றுவாய் நின்னைக் கேட்டதொன் றுண்டோ
          திருவுளம் அறியநான் அறியேன்.

உரை:

     போற்றுகின்ற அடியவர் எப்போதும் போற்றும் தூயவனே மக்களாயினார் அன்பு பொருந்திய தம்முடைய தந்தையரை நோக்கி, வேறிருந்து வாழ்தற்கு வீடு தருக, செலவுக்குப் பணம் தருக, மென்மையான சரிகை வைத்த உடை தருக, அவ்வாடைகட் கேற்ற பொற்பணிகளைத் தருக என்று கேட்டுப் பெறலாகாமைக்கு வருந்துவார்கள்; இவையிற்றை வேண்டி, அடியவனாகிய என்னைத் தெளிவிப்பனே; நான் நின்னைக் கேட்டதில்லை யன்றோ? தேவரீருடைய திருவுளம் அறிய நான் கேட்டறியேன். எ.று.

     இடையறவின்றிப் போற்றும் இயல்புடைமை பற்றி, மெய்யடியாரைப் “போற்றுவார்” எனப் புகல்கின்றார். புனிதன் - தூயவன். பெற்றோரின் நீங்கித் தனிக் குடித்தனம் செய்ய விரும்புதல் புலப்பட, “வேற்று வாழ்வடைய வீடு தா” எனவும், அவ்வாழ்வுக்கு முதல் வேண்டிப் “பணம் தா” எனவும் கேட்கின்றார்கள். சரிகை - பொன்னாலும் வெள்ளியாலும் இழைகள் அமைத்து உடைகளின் இடையிலும் கடைலிலும் நெய்யப்படுவது. வத்திரம் - உடையும் மேலாடையுமாம். ஆபரணம் - நகை வகை. உடுக்கும் உடைக்கு ஒப்ப அமைய வேண்டுதலின், “ஏற்ற ஆபரணம்” எனச் சிறப்பிக்கின்றர். பல்வகைத் துன்பங்களால் கலக்கமுறும் போது இறைவன் நினைவுகள் மனத்தைத் தெளிவித்தலின், “அடியேன் தேற்றுவாய்” என வுரைக்கின்றார்.

     இதனால் ஆடம்பர வாழ்வு வேண்டிய மக்கள் தம் பெற்றோரை வருத்தும் திறம் கூறியவாறாம்.

     (108)