3518. குணம்புரி எனது தந்தையே உலகில்
கூடிய மக்கள்தந் தையரைப்
பணம்புரி காணி பூமிகள் புரிநற்
பதிபுரி ஏற்றபெண் பார்த்தே
மணம்புரி எனவே வருத்துகின் றார்என்
மனத்திலே ஒருசிறி தேனும்
எணம்புரிந் துனைநான் வருத்திய துண்டோ
எந்தைநின் ஆணைநான் அறியேன்.
உரை: நலமே செய்கின்ற என் தந்தையே! உலகின்கண் கூடி யுறையும் மக்கள் தந்தையரை நோக்கி, பணமும் நிலமும் பூமியும் நல்ல இடமும் கொடுத்துத் தங்களுக்கு ஏற்ற பெண்ணைப் பார்த்து மணம் புரிதல் வேண்டுமென வருத்துகின்றார்கள்; நான் என் மனத்தில் ஒரு சிறிதளவும் இவற்றையெண்ணி, நான் ஒருநாளேனும் உன்னை வருத்தப்படுத்தியது உண்டோ; எந்தை யாகிய சிவனே, நினது ஆணையாகச் சொல்லுகிறேன், நான் எண்ணியறியேன். எ.று.
குணம் - நன்மையே விளைவிக்கும் பண்பு. உலகிற்கண் இயற்கையன்பினால் மக்கள் அனைவரும் கூடியுறையும் குணஞ் செயல்களையுடைய யவராதலால் அவர்களை, “கூடிய மக்கள்” என்று கூறுகின்றார். புரிதல் ஈண்டுத் தருதல் மேற்று. “பணம்புரி காணி பூமிகள் புரிநற் பதிபுரி” என்றவிடத்துப் புரிதல். தருகை என்னும் பொருள் மேலதாதல் அறிக. எணம் புரிதல் - எண்ணுதல். வருத்துதல் - பன்முறையும் சொல்லிக் கேட்போர் மனம் அயர்வித்தல்.
இதனால், உலகியலில் பெற்ற மக்கள் தாய் தந்தையரை வருத்தும் திறம் கூறியவாறாம். (109)
|