3519. இகத்திலே எனைவந் தாண்டமெய்ப் பொருளே
என்னுயிர்த் தந்தையே இந்தச்
சகத்திலே மக்கள் தந்தையர் இடத்தே
தாழ்ந்தவ ராய்ப்புறங் காட்டி
அகத்திலே வஞ்சம் வைத்திருக் கின்றார்
ஐயவோ வஞ்சம்நின் அளவில்
முகத்திலே என்றன் அகத்திலே உண்டோ
முதல்வநின் ஆணைநான் அறியேன்.
உரை: எப்பொருட்கும் முதல்வனே! இப்பிறப்பிலே என் மனத்தின்கண் எழுந்தருளி என்னை யாண்டு கொண்ட மெய்பொருளாகிய சிவனே, என்னுயிர்க்கமைந்த தந்தையே! இந்த உலகத்தில் மக்களாயினார், தங்களைப் பெற்ற தந்தையர் முன் மிக்க பணிவுடையவராய்ப் பிறரறியப் புறத்தே தோற்றுவித்துத் தங்கள் மனத்திலே வஞ்சக நினைவுகள் கொண்டிருக்கிறார்கள்; ஐயனே, என் முகத்திலே அன்றி என் மனத்திலோ உன்பால் யான் வஞ்சம் கொண்டது உண்டோ, இல்லை; இது நினது ஆணை. எ.று.
இகம் - இப்பிறப்பு. மெய்ப்பொருள் - என்னுள் உள்ள பரம்பொருள். உயிர்களிடத்தே உயிர்க்குயிராய் இருந்து உணர்வு தந்து இயக்குவது சிவபரம் பொருளின் இயல்பாதலின், “என்னை வந்தாண்ட மெய்ப்பொருளே” என இயம்புகின்றார். உயிர் போல் உணர்வும் இன்பமும் தந்து உலகில் வாழச் செய்தலால், என்னுயிர்த் தந்தையே” என்று இசைக்கின்றார். சகம் - உலகம். பெற்ற “தாய் தந்தையர் கண்முன் அன்பும் பணிவும் உடையவர் போல் நடித்து மனத்தின்கண் வஞ்சனையும் தீமையும் நினைக்கின்ற புதல்வரைப் பற்றிப் புகல்கின்றாராதலால், “மக்கள் தந்தையர் இடத்தே தாழ்ந்தவராய்ப் புறங்காட்டி அகத்திலே வஞ்சம் வைத்திருக்கின்றார்” என இசைக்கின்றார். ஐயன் - தலைவன். நின்னளவில் - நின்னிடத்தில். முகம் புறத்துக்கும், அகம் மனத்திற்கும் குறிப்புக்களாயின.
இதனால், இறைவன் திருமுன் அகமும் புறமும் ஒத்த நிலையில் நின்று வள்ளற் பெருமான் ஒழுகிய திறம் கூறியவாறாம். (110)
|