3520.

     தன்மைகாண் பரிய தலைவனே எனது
          தந்தையே சகத்திலே மக்கள்
     வன்மைவார்த் தைகளால் தந்தையர் தம்மை
          வைகின்றார் வள்ளலே மருந்தே
     என்மனக் கனிவே என்னிரு கண்ணே
          என்னுயிர்க் கிசைந்தமெய்த் துணையே
     நின்மனம் வெறுப்பப் பேசிய துண்டோ
          நின்பதத் தாணைநான் அறியேன்.

உரை:

     தன்மைகள் இவையென அறிய முடியாத தலைவனாகிய சிவனே! எனக்குத் தந்தையாகியவனே! உலகத்தில் மக்களாயினார் தங்களைப் பெற்ற தந்தையரை வன்சொற்களால் இழித்துப் பேசுகின்றார்கள்; அருள் வள்ளலே, அமுது போல்பவனே; என் மனத்தைக் கனிவிக்கும் பெருமானே! எனது இரண்டு கண் போன்றவனே! என் ஆருயிர்க்குப் பொருந்திய மெய்ம்மைத் துணைவனே! நின்னுடைய மனம் வெறுக்கும்படி நான் பேசியது உண்டோ; தேவரீருடைய திருவடி ஆணையாக நான் அறியேன். எ.று.

     “தன்மை பிறரால் அறியாத தலைவன்” என்று சான்றோர் பாராட்டுதலால், சிவனைத் “தன்மை காண்பரிய தலைவன்” என்று பாராட்டுகின்றார். உணர்வு தந்தருளுதலால், “தந்தையே” என்று குறிக்கின்றார். தங்கள் மனம் உவப்பன சொல்லாவிடினும் செய்யா தொழியினும் மக்கள் தங்கள் பெற்றோர்களைச் சினந்து வன்சொற்களால் வைது பேசுவது எங்கும் காணப்படுதலால், “மக்கள் வன்மை வார்த்தைகளால் தந்தையர் தம்மை வைகின்றார்” என வுரைக்கின்றார். தனது திருவருளாகிய செல்வத்தை வரையாது வழங்குவது பற்றி, “வள்ளலே” என்றும், பிறவி நோயை நீக்குதலின், “மருந்தே” என்றும், மனத்தின் வன்மையைப் போக்கி அன்புருவாய் மெலிவித்தலின், “மனக் கனிவே” என்றும், காணப்படுவனவற்றை உணர்வு ஒன்றித் தெளியக் காணச் செய்தலால் சிவபெருமானை, “என்னிரு கண்ணே” என்றும் இயம்புகின்றார். எவ்விடத்தும் எப்போதும் உயிர்க்குயிராய் இருந்து உணர்வுத் துணை புரிதலால், “என்னுயிர்க் கிசைந்த மெய்த் துணையே” என விளம்புகின்றார். தான் உரைக்கும் உரையினுடைய மெய்ம்மையை வலியுறுத்தற்கு, “நின் பதத் தாணை நான் அறியேன்” எனக் கூறுகின்றார்.

     இதனால், இறைவன் மனம் வெறுக்கத் தக்க வகையில் வள்ளற் பெருமான் ஒருசொல்லும் உரைத்ததில்லை என்பது தெரிவித்தவாறாம்.

     (111)