3521.

     ஒப்பிலா மணிஎன் அப்பனே உலகில்
          உற்றிடு மக்கள்தந் தையரை
     வைப்பில்வே றொருவர் வைதிடக்கேட்டு
          மனம் பொறுத் திருக்கின்றார் அடியேன்
     தப்பிலாய் நினைவே றுரைத்திடக் கேட்டால்
          தரிப்பனோ தரித்திடேன் அன்றி
     வெப்பில்என் உயிர்தான் தரிக்குமோ யாதாய்
          விளையுமோ அறிந்திலேன் எந்தாய்.

உரை:

     ஒப்புயர் வில்லாத மாணிக்க மணி போன்ற என்னுடைய தந்தையே! உலகில் வாழ்கின்ற மக்கள் தம்மைப் பெற்ற தந்தையை ஓரிடத்தில் வேறொருவர் வைது கூறவும் கேட்டுக் கொண்டு மனம் பொறுத்திருக்கின்றார்கள்; அடியவனாகிய நான் குற்றம் சிறிதுமில்லாத நின்னை மாறுபட உரைக்கக் கேட்டால் மனம் பொறேன்; பொறுக்கவும் மாட்டேன்; கேட்டவிடத்து உள்ளத்தில் எழும் சின மிகுதியால் அது கேட்டுருகும் என்னுயிர்தான் நிலைக்குமோ; என்னதான் ஆகுமோ? எந்தையாகிய சிவனே; நான் அறிகிலேன். எ.று.

     சிவத்தினும் மேம்பட்ட பொருள் ஒன்றும் இல்லையாதல் பற்றி, “ஒப்பிலா மணி” என்று உரைக்கின்றார். மணி என நின்றது, மாணிக்க மணியின் நிறமுடைமை பற்றிச் சிவனை, “மணி” என்கின்றார். வைப்பு - இடம். வைதல் - மனம் நோவப் பேசுதல். தப்பு - குற்றம் வேறு உரைத்தல்; குற்றமாகப் பேசுதல். தரித்தல் - தாங்குதல். வெப்பு - தீயது கேட்பின் நெஞ்சில் உண்டாகும் வெம்மை. தரித்தல் - தாங்குதல். என் உயிர் கெடாது அதன் விளைவு என்ன ஆகுமோ எனவும், என்ன பயன் விளையுமோ எனவும், உண்மை அறியாமையால் வருந்துகிறேன் என்றற்கு “யாதாய் விளையுமோ அறிந்திலேன் எந்தாய்” என அறிவிக்கின்றார்.

     இதனால், சிவனைப் பிறர் வைது பேசின் வள்ளற் பெருமான் அது கேட்க மாட்டாமையைக் கிளர்ந்து கூறியவாறாம்.

     (112)