3522.

     இத்தகை உலகில் இங்ஙனம் சிறியேன்
          எந்தைநின் திருப்பணி விடுத்தே
     சித்தம்வே றாகித் திரிந்ததே இலைநான்
          தெரிந்தநாள் முதல்இது வரையும்
     அத்தனே அரசே ஐயனே அமுதே
          அப்பனே அம்பலத் தாடும்
     சித்தனே சிவனே என்றென துளத்தே
          சிந்தித்தே இருக்கின்றேன் இன்றும்.

உரை:

     இந்த அழகிய உலகில் சிறுமை யுடையவனாகிய நான் இவ்வாறு என் தந்தையாகிய நினக்குரிய திருப்பணிகளைக் கைவிட்டு மனம் வேறுபட்டு எனக்கு அறிவு வழங்கிய நான் முதல் இன்றுவரை கண்டபடித் திரிந்ததில்லை; தந்தையே, அருளரசே, தலைவனே, அமுதம் போல்பவனே, அப்பனே, திருச்சிற்றம்பலத்தில் ஆடல் புரிகின்ற சித்தத்தை யுடையவனே, சிவபெருமானே என்று எனது மனத்தின்கண் இப்பொழுது சிந்தித்துக் கொண்டே இருக்கின்றேன். எ.று.

     தகை - அழகு. இங்ஙனம் - மேலே காட்டிய தீய வழிகளில் நிற்றல். அறிவாற்றல்களால் சிறுமை யுடைமை தோன்றச் “சிறியேன்” என்கின்றார். திருப்பணி - சிவ பூசையும் சிவ வழிபாடுகளுமாம். சித்தம் - மனம். சிவநெறிக்கண் செல்லாமல் வேறு தீய நெறிகளில் சென்று திரிந்ததில்லை என்பதை வலியுறுத்தற்கு, “வேறாகித் திரிந்ததே இலை” என்று கூறுகின்றார். தெரிந்த நாள் - நல்லதன் நலமும் தீயதன் தீமையும் உள்ளவாறு அறியும் அறிவு வழங்கிய நாள். தில்லைச் சிற்றம்பலத்தில் ஆடிக் கொண்ட திருவுள்ளத்தை, “அம்பலத்தாடும் சித்தத்தை யுடையவன்” எனத் தெரிவிக்கின்றார். தீய நினைவுச் செயல்களில் செல்லாதாயின் சிந்தித்தல் யாதாக இருக்கலாம் என்று ஐயம் எழாமை பொருட்டு, “என துளத்தே இன்றும் சிந்தித்தே இருக்கின்றேன்” என்று இயம்புகின்றார்.

     இதனால், சிவப்பணியில் வள்ளற் பெருமான் ஒன்றியிருந்த திறம் உரைக்கப்பட்டவாறாம்.

     (113)