3523. பொய்வகை மனத்தேன் என்னினும் எந்தாய்
பொய்யுல காசைசற் றறியேன்
நைவகை தவிரத் திருச்சிற்றம் பலத்தே
நண்ணிய மெய்ப்பொருள் நமது
கைவகைப் படல்எக் கணத்திலோ எனநான்
கருதினேன் கருத்தினை முடிக்கச்
செய்வகை அறியேன் என்செய்வேன் ஐயோ
தெய்வமே என்றிருக் கின்றேன்.
உரை: நிலையில்லாத மனத்தை யுடையவனாயினும் எந்தையாகிய சிவனே, நிலையில்லாத உலகியல் ஆசைகளைக் கொண்டறியேன்; உயிர்களின் துன்ப வகை நீங்கும் பொருட்டுத் திருச்சிற்றம்பலத்தின்கண் எழுந்தருளுகின்ற மெய்ப்பொருளாகிய பெருமானே; நினது திருவருள் என் கை யகப்படுவது எந்த நேரத்திலே என நான் நினைத்தேன்; நினைத்த கருத்தை முடித்துக் கொள்ளற் கமைந்த செயல் வகைகளை அறிகிலேன்; யான் என்ன செய்வேன், ஐயோ, தெய்வமே என்று தொழுத வண்ணம் இருக்கின்றேன். எ.று.
ஒருபொருளும் ஒன்றி நில்லாமல் மாறிய நினைவுகளால் கறங்குபோல் சூழலும் இயல்பினதாதல் பற்றி, “பொய்வகை மனம்” என்று புகல்கின்றார். உலகியல் ஆசைகளின் நிலையா இயல்பு பற்றி, “பொய்யுலகு ஆசை” என உரைக்கின்றார். நைவகை - பிறப்பு இறப்புத் துன்ப வகை.
உயிர்கள் தம்மை அடைந்து துன்ப நீக்கம் பெறுதல் குறித்தே தில்லையம்பலத்தில் இறைவன் கூத்தப் பெருமானாக எழுந்தருளிக் காட்சி தந்தருளுவது உயிர்கள் எய்தும் பிறவித் துன்பம் நீங்கும் பொருட்டே என்பது இதன் கருத்து. இதற்குரிய திருவருள் ஞானப் பேற்றை எய்தும் திறத்தை, “நண்ணிய மெய்ப் பொருள் நமது கை வகைப்படல் எக்கணத்திலோ என நான் கருதினேன்” என மொழிகின்றார். திருவருள் ஞானப் பேற்றுக்குரிய நெறி தெரியாமை விளங்க, “கருத்தினை முடிக்கச் செய்வகை யறியேன் என்செய்வேன் ஐயோ” என இரங்குகின்றார். அதுபற்றித் தான் செய்வது இதுவென மொழிவாராய், “தெய்வமே என்று இருக்கின்றேன்” எனக் கூறுகின்றார்.
இதனால், வள்ளற் பெருமான் திருவருள் ஞானப் பேறே கருதி இருப்பதைப் புலப்படுத்தியவாறாம். (114)
|