3525.

     பொய்படாப் பயனே பொற்சபை நடஞ்செய்
          புண்ணியா கண்ணினுள் மணியே
     கைபடாக் கனலே கறைபடா மதியே
          கனிப்பருங் கருணையங் கடலே
     தெய்வமே எனநான் நின்னையே கருதித்
          திருப்பணி புரிந்திருக் கின்றேன்
     மைபடா உள்ள மெலிவும்நான் இருக்கும்
          வண்ணமும் திருவுளம் அறியும்.

உரை:

     மெய்ம்மை நெறியின் பயனாக உள்ளவனே, பொற் சபையில் நடம் புரிகின்ற புண்ணியனே; கண்ணில் மணி போன்றவனே; இருளுறாத நெருப்புப் போன்றவனே; களங்கமில்லாத மதி போன்றவனே, எண்ணுதற்கரிய கருணைக் கடலே, யான் தொழுது வணங்கும் தெய்வமே என்று நான் நினைவில் கொண்டு நினக்குரிய திருப்பணியைச் செய்து கொண்டிருக்கின்றேன்; குற்றமில்லாத என்னுள்ளத்தின் மெலிவும், நான் இருக்கும் திறமும் தேவரீருடைய திருவுள்ளம் நன்கு அறியும். எ.று.

     பொய்ம்மை ஒழுக்க முடையார் பெறலாகாத பரம்பொருளாதலின், “பொய்படாப் பயனே” என்றும், தில்லைப் பொன்னம்பலத்தில் ஞான நாடகம், ஊன நாடகம் என்ற இரண்டையும் செய்தருளும் பெருமானாதலின், “பொற்சபை நடஞ்செய் புண்ணியா” என்றும் புகழ்கின்றார். சிறந்த உறுப்பாயினும் கண்ணிற்கு ஒளியும் பார்வையும் நல்கும் மணிபோல உயிர்கட்கு உள்ளுணர்வாய் நின்று உண்மை ஞானத்தை நல்கும் சிறப்புடைமை பற்றிச் சிவனை, “கண்ணினுள் மணியே” எனக்கட்டுரைக்கின்றார். கை - கீழ்மை; அஃதாவது உள்ளே இருளுடைமை. மை புரிந்த விளக் கொளியின் கனல் போலாது தூய நெருப்புருவாய் இருத்தலின் சிவனை, “கைபடாக் கனலே” என்கின்றார். முழுமதியத்தின்கண் தோன்றும் களங்கம் போல வெண்ணீறு சண்ணித்த மேனியால் பால் மதிபோல் தோன்றுதலின், சிவபிரானைக் “கறைபடா மதியே” எனக் கூறுகின்றார். யாவராலும் அளக்க முடியாத கருணை நிறைந்த பெருங் கடலாய் விளங்குதலால், “கணிப்பருங் கருணையங் கடலே” என வுரைக்கின்றார் உருவுப் பொருளாய்த் தோன்றி அன்பராயினார் தொழுது வணங்கும் தன்மையால், “தெய்வமே” எனத் தெரிவிக்கின்றார். இவ்வாறு பலப்பட நினைந்து அருளறத் திருப்பணி புரிந்து கொண்டிருப்பதைத் தெரிவித்தற்கு, “நான் நின்னையே திருப்பணி புரிந்திருக்கின்றேன்” என்று மொழிகின்றார். திருப்பணி புரிந்திருக்கின்றேன் என்பதை, திருப்பணி புரிந்து இருக்கின்றேன் என்று பிரித்து திருப்பணி செய்தலை விழைந்து அதன் கண்ணே நிலைத்திருக்கின்றேன் என்று பொருள் கூறுதலும் உண்டு. குற்றமில்லாத மனமுடையனாயினும் அதன் பயனாய்ப் பெறற்குரிய திருவருளைப் பெறாமையால் எய்துகின்ற மெலிவும் அதன் பயனாக உடம்பில் உற்றிருக்கின்ற மெலிவும் யாவர்க்கும் நன்கு புலனாக, “மைபடா உள்ள மெலிவும் நான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும்” என்று மொழிகின்றார்.

     இதனால், அருளறப் பணிக்கண் வள்ளற் பெருமான் கொண்டிருந்த ஊக்க மிகுதி தெரிவித்தவாறாம்.

     (116)