3526. தன்னிகர் அறியாத் தலைவனே தாயே
தந்தையே தாங்குநற் றுணையே
என்னிரு கண்ணே என்னுயிர்க் குயிரே
என்னுடை எய்ப்பினிலே வைப்பே
உன்னுதற் கினிய வொருவனே எனநான்
உன்னையே நினைத்திருக் கின்றேன்
மன்னும்என் உள்ள மெலிவும்நான் இருக்கும்
வண்ணமும் திருவுளம் அறியும்.
உரை: தனக்குவமை யறிய முடியாத தனித் தலைவனே; எனக்குத் தாயும் தந்தையு மாகியவனே; என்னைத் தாங்கி யருளும் நல்ல துணைவனே; என்னுடைய இரண்டு கண் போன்றவனே, என்னுயிர்க்கு உயிரானவனே; எனக்குச் சேம வைப்பாய்த் திகழ்பவனே; நினைத்தற்கு இனிய ஒப்பற்றவனே என்று நான் உன்னை நினைத்திருக்கின்றேனாகவும் நிலைத்த என் மனத்தின்கண் உளதாகிய மெலிவும் எனது தன்மையும் தேவரீருடைய திருவுள்ளம் நன்கு அறியும். எ.று.
“தனக்குவமை யில்லாதான்” எனச் சான்றோர் குறித்தலால் “தன்னிகர் அறியாத் தலைவனே” என்கின்றார். உலகங்களைத் தாயாய் புறந் தருதலால், “தாயே” என்றும், உயிர்க்கு உணர்வு தந்து அளித்தலால், “தந்தையே” என்றும், வாழ்வார்க்கு வழித் துணையாய் நின்று உதவுதலால், “தாங்கும் நற்றுணையே” என்றும் உரைக்கின்றார். கருவி கரணங்கள் சோர்வு அடையுங்கால் ஊக்குவது பற்றி, “என்னுயிர்க் குயிரே” எனக் கூறுகின்றார். உணர்வு தளருமிடத்து மெய்யுணர்வு நல்கி ஆதரித்தலால், “என்னுடை எய்ப்பினில் வைப்பே” என்று இயம்புகின்றார். நினைவால் நினைக்கும் தோறும் உள்ளத்தில் அமுதூறி இன்பம் செய்தலால் “உன்னுதற் கினிய ஒருவனே” என உரைக்கின்றார். “நினைவால் நினைய இனியரன்” (புறவம்) என ஞானசம்பந்தர் உரைப்பது காண்க. உயிர் உடலோடு உறையும் காறும் உள்ளம் நிலை பெறுதலின், “மன்னும் உள்ளம்” என்று மொழிகின்றார்.
இதனால், வள்ளற் பெருமான் சிவனைப் பற்றி உள்ளத்தில் கருதியிருந்த குறிப்புக்களை வெளியிட்டவாறாம். (117)
|