3528. உவந்தென துளத்தே உணர்த்திய எல்லாம்
உறுமலை இலக்கென நம்பி
நிவந்ததோள் பணைப்ப மிகஉளங் களிப்ப
நின்றதும் நிலைத்தமெய்ப் பொருள்இப்
பவந்தனில் பெறுதல் சத்தியம் எனவே
பற்பல குறிகளால் அறிந்தே
சிவந்தபொன் மலைபோல் இருந்ததும் இந்நாள்
திகைப்பதும் திருவுளம் அறியும்.
உரை: ஞான ஆசிரியர்கள் மகிழ்ந்து என்னுள்ளத்து அமைய வுணர்த்திய கருத்துக்கள் அனைத்தையும் பெரிய மலையிலக்கு என விரும்பி உயர்ந்த தோள்கள் பூரிக்க மனம் மிகவும் களிக்க, நான் உயர்ந்து நின்றதும் நிலைபெற்ற சிவஞானப் பயனாகிய உண்மைப் பொருளை இப்பிறப்பில் பெறுவது உறுதி யென்று பற்பல குறிகளால் அறிந்த சிவந்த பொன்மலை போல் இருந்ததும், இந்நாள் கலக்கமுற்று என்னறிவு திகைப்பதும், தேவரீருடைய திருவுள்ளம் நன்கு அறியும். எ.று.
கேட்போர் உள்ளம் கொள்ளுமாறு உணர்த்தும் ஆசிரியர், தன் மனத்தின்கண் அன்பும் மகிழ்ச்சியும் கொண்டாலன்றி உண்மைகளை உள்ளவாறு உரைக்க மாட்டாராகலின், “எனது உளத்தே உவந்து உணர்த்திய வெல்லாம்” என உரைக்கின்றார். உவந்து உணர்த்துவது ஆசிரியன் செயலாதலின் ஞானாசிரியன் என்று வருவிக்கப்பட்டது. சலியாது நிலைபெறும் குறிக்கோளை மலையிலக்கு என்பது நூல் வழக்கு. நிவந்த தோள் - மகிழ்வு மிகுதியால் தோள் உயர்தல் மக்கட்குரிய மெய்ப்பாடுகளில் ஒன்று. படைத்தல் - பெருத்தல்; இங்குப் பூரித்தல் மேற்று. இது மனத்தின்கண் உளதாகும் களிப்புக் காரணமாக உண்டாவதாகலின், “உளம் களிப்ப நின்றதும்” என இயம்புகின்றார். சிவஞானத்தின் மெய்ப் பயன் விகாரமின்றி எஞ்ஞான்றும் ஒருதன்மைத்தாய் நிலை பெறுவதாதலால், “நிலைத்த மெய்ப்பொருள்” எனப் புகழ்கின்றார். பவம் - பிறப்பு. மெய்ப்பொருட் பேறு பலப் பிறப்புக்களில் செய்யும் முயற்சி வகைகளால் பெறலாவதாதலால், அதன் அருமை தோன்ற, “இப்பவந்தனில் பெறுதல் சத்தியம்” என்றும், அதனைத் தானும் பற்பல குறிகளாலும் அடையாளங்களாலும் அறிந்து கொண்டமை விளங்க, “பற்பல குறிகளால் அறிந்து” என்றும், அதனால் விளைந்த செம்மாப்பைத் தெரிவிக்கின்றமை பற்றி, “சிவந்த பொன்மலை போல் இருந்ததும்” என்று கூறுகிறார். இந்த இன்ப ஞானநிலை நிலைபெற நில்லாது மக்கட் பண்பு பற்றி மாறி மயக்கினமை இனிது விளங்க, “இந்நாள் திகைப்பதும் திருவுளம் அறியும்” என்று உரைக்கின்றார்.
இதனால் சிவஞானம் பெற்று எய்திய மெய்ம்மகிழ்ச்சி வெளிப்படுத்தியவாறாம். (119)
|