3529. ஏய்ந்தபொன் மலைமேல் தம்பத்தில் ஏறி
ஏகவும் ஏகவும் நுணுகித்
தேய்ந்தபோ தடியேன் பயந்தவெம் பயத்தைத்
தீர்த்துமேல் ஏற்றிய திறத்தை
வாய்ந்துளே கருதி மலைஎனப் பணைத்தே
மனங்களிப் புற்றுமெய் இன்பம்
தோய்ந்துநின் றாடிச் சுழன்றதும் இந்நாள்
சுழல்வதும் திருவுளம் அறியும்.
உரை: பொருந்திய பொன்னிற மலைமேல் நின்று தூணின் மேன் மேலும் செல்லவும் அது தனது உருவம் நுண்ணியதாய் தேய்ந்து தோன்றிய போது கண்டு அச்சத்தால் அடியேன் கொண்ட வெவ்விய பயத்தைப் போக்கி என்னை ஊக்கிய திறத்தை உள்ளத்தில் எண்ணி உவகை மிகுந்து மலைபோல் பெருமிதம் உற்று உடம்பெலாம் இன்பம் நிறைந்து நின்று சுழன்று கூத்தாடியதும், பின்னர் இப்பொழுது கலக்கமுற்று உள்ளம் அலமருதலும் தேவரீருடைய திருவுள்ளம் நன்கு அறியும். எ.று.
பொன்மலை ஒன்று தோன்றி அதன் மேல் நெடிது உயர்ந்த தம்பம் ஒன்று நிற்கக் கண்டதும், பின்னர் அதன்மேல் ஏறியதும், ஏறிய போது அது நுணுகி யிருப்பது கண்டு அஞ்சியதும், அப்பொழுது இறையருள் அவரை ஊக்கியதும் கனவுக் காட்சிகளாகும். கனவின் பயனாக எய்திய மெய்ப்பாட்டை, “மலை யெனப் பனைத்தே” மனங் களிப்புற்று மெய்யின்பம் தோய்ந்து நின்றாடிச் சுழன்றதும்” எனச் சொல்லுகின்றார். கனவு கண்டவர் அதன் பயனை ஆராய்ந்து மகிழ்ந்தமை புலப்பட, “மனம் களிப்புற்று மெய்யின்பம் தோய்ந்து” என்று கூறுகின்றார். அந்த மன மகிழ்ச்சி பின்னர் மறைந்து உலகியல் துன்பங்களால் அலைப்புண்டு வருந்திய இயல்பை, “இந்நாள் சுழல்வது திருவுளம் அறியும்” என எடுத்தோதுகின்றார்.
இதனால், பொன் மலையில் தம்பம் ஒன்று கண்டு அதன் மேல் ஏற முயன்று திருவருளால் ஊக்கப்பட்ட நிகழ்ச்சி தெரிவித்தவாறாம். (120)
|