3531. கற்றவர் கல்லார் பிறர்பிறர் குரல்என்
காதிலே கிடைத்தபோ தெல்லாம்
மற்றவர் தமக்கென் உற்றதோ அவர்தம்
மரபினர் உறவினர் தமக்குள்
உற்றதிங் கெதுவோ என்றுளம் நடுங்கி
ஓடிப்பார்த் தோடிப்பார்த் திரவும்
எற்றரு பகலும் ஏங்கிநான் அடைந்த
ஏக்கமுந் திருவுளம் அறியும்.
உரை: கற்றவர்கள் கல்லாதவரகளுமாகிய பிறர் பிறருடைய உரத்த குரலோசைகள் என் காதிகள் விழுந்த போதெல்லாம் அவர்கட்கு என்ன தீங்கு உண்டாயிற்றோ அல்லது அவர்களுடைய இனத்தார் உறவினராகியோர்கட்கு யாது தீங்கு உண்டாயிற்றோ என்று நினைந்து மனம் நடுங்கி ஓடி யோடிப் பார்த்து இரவும் பகலும் ஏக்கமுற்று நான் வருந்திய திறத்தைத் தேவரீருடைய திருவுள்ளம் நன்கு அறியும். எ.று.
கற்றவர், கல்லார் என்பது மக்கள் எல்லாரையும் அடக்கிக் கொள்வதாயினும் ஆடவர், பெண்டிர், இளையர், முதியர் என்ற பகுப்பெல்லாம் அடங்க, “பிறர் பிறர்” என்று கூறுகின்றார். தீங்குண்டானாலும் அச்சம் உண்டானாலும் மக்கள் உரத்த குரலெடுத்து அரற்றுவார் ஆதலால், “பிறர் பிறர் குரல் என் காதிலே கிடைத்த போதெல்லாம் மற்றவர் தமக்கென் உற்றதோ” எனவும், உறவினர்க்கும் இனத்தவர்க்கும் தீங்கு உண்டானாலும் மிக்க குரலெடுத்துப் புலம்புவது மக்கள் இயல்பாதலின், “மரபினர் உறவினர் தமக்குள் உற்றதிங் கெதுவோ” எனவும் கலக்கமுற்ற திறத்தை எடுத்துரைக்கின்றார். உண்மையறியும் அவா நீங்காமையால், “ஓடிப் பார்த்து ஓடிப் பார்த்து” என்றும், நாளும் இந்த இயல்பே கொண்டு உறைந்த வள்ளற் பெருமானது இயல்பை விளக்குதற்கு, “இரவும் எற்றரு பகலும் ஏங்கி நான் அடைந்த ஏக்கம்” என இசைக்கின்றார். எல் - ஒளி.
இதனால், பிறரது உரத்த குரல் கேட்டு வள்ளற் பெருமான் உள்ளவமைதி குலைந்து அவலமுற்ற திறம் கூறியவாறாம். (122)
|