3532.

     கருணையம் பதிநங் கண்ணுள்மா மணிநம்
          கருத்திலே கலந்ததெள் ளமுதம்
     மருள்நெறி தவிரக்கும் மருந்தெலாம் வல்ல
          வள்ளல்சிற் றம்பலம் மன்னும்
     பொருள்நிறை இன்பம் நம்மைஆண் டளித்த
          புண்ணியம் வருகின்ற தருணம்
     தருணம்இப் போதென் றெண்ணிநான் இருக்கும்
          தன்மையும் திருவுளம் அறியும்.

உரை:

     கருணைக்கு உறைவிடமும் கண்ணுள் விளங்குகின்ற கருமணியும் நமது உள்ளத்தின் உள்ளே கலந்து இனிக்கும் தெள்ளிய அமுதமும், தீய நெறிகளில் செல்லாது விலக்க அருளும் தேவரமுதம் ஒப்பதும், எல்லாம் வல்ல வள்ளலும், தில்லைச் சிற்றம்பலத்தே நின்று விளங்குகின்ற ஞானப் பொருள் நிறைந்த இன்ப வடிவமும் நம்மையாண்டு அருளுகின்ற புண்ணிய மூர்த்தியுமாகிய சிவபெருமான், நமக்கு அருள் செய்ய வருகிற சமயம் இப்போது போலும் என்று நினைத்து நான் இருக்கும் தன்மையைத் தேவரீருடைய திருவுள்ளம் அறியும். எ.று.

     கருணைக்கு இருப்பிடம் என்பது, “கருணையம் பதி” எனப்படுகின்றது. கண்ணுள் மாமணி என்றவிடத்து, மா அருமை குறித்தது. இன்ப வுணர்வு உள்ளத்தின்கண் ஒளிர்தளின், “நம் கருத்திலே கலந்த தெள்ளமுதம்” என உரைக்கின்றார். தன்னியல்பில் தெளிவுடையதாதலின், தேவரமுதம் ‘தெள்ளமுதம்’ எனப்படுவதாயிற்று. மருள் நெறி - தீமை பயக்கும் குற்ற நெறிகள். மன்னும் பொருள் - சிவஞானச் செம்பொருள். நன்னெறி அறிருறுத்தி அருள் புரிவது பற்றி, “நம்மை ஆண்டளித்த புண்ணியம்” எனப் புகழ்கின்றார்.

     இதனால், வள்ளற் பெருமான் திருவருள் இன்ப ஞான வரவு நோக்கி ஏங்கி யிருந்த திறம் எடுத்தோதியவாறாம்.

     (123)