3533. இமையவர் பிரமர் நாரணர் முதலோர்
எய்துதற் கரியபேர் இன்பம்
தமைஅறிந் தவருட் சார்ந்தபேர் ஒளிநம்
தயாநிதி தனிப்பெருந் தந்தை
அமையும்நம் உயிர்க்குத் துணைதிருப் பொதுவில்
ஐயர்தாம் வருகின்ற சமயம்
சமயம்இப் போதென் றெண்ணிநான் இருக்கும்
தன்மையும் திருவுளம் அறியும்.
உரை: தேவர்களும் பிரமர்களும் நாரணர்களும் ஆகிய பெரியோர்கள் அடைய முடியாத அருமையும் பெருமையும் வாய்ந்த இன்பமாகியவனும், தம்மை யறிந்து ஞானப் பேறு பெற்ற சான்றோர்க்குப் பெரிய ஞானவொளியாகியவனும், நமக்குத் தயாநிதியும் ஒப்பற்ற பெரிய தந்தையும் வீடு பேற்றுக்கு அமைந்த நம் உயிர்க்குத் துணையாகியவனும், தில்லைச் சிற்றம்பலத்தில் எழுந்தருளும் ஒப்பற்ற தலைவராகிய சிவபெருமான் நமக்கு அருள் புரிய வருகின்ற சமயம் இதுவாகும் என்று எண்ணி நான் இருக்கும் தன்மையைத் தேவரீருடைய திருவுள்ளம் நன்கு அறியும். எ.று.
இமைத்தலில்லாத கண்களை யுடையவராதலின், தேவர்களை, “இமையவர்” என்று சொல்லுகின்றார். இவ்வாறு வழங்குவது எதிர்மறை இலக்கணம் ஆகும். தேவர், பிரமர், நாரணர் முதலியோர் எண்ணிறந்தோர் என்பது பற்றிப் பன்மை வாய்பாட்டில் கூறுகின்றார். “நூறு கோடி பிரமர்கள் நுங்கினார், ஆறுகோடி நாராயணரங்கனே, ஏறு கங்கை மணலெண்ணில் இந்திரர், ஈறிலாதவன் ஈசன் ஒருவனே” (ஆதிபுரா) எனத் திருநாவுக்கரசர் உரைப்பது காண்க. இவர்களும் ஏனையோர் போன்று செத்துப் பிறக்கின்ற சிறுமையுடையவர்களாதலின், இவர்களால் இன்ப வடிவாய சிவம் அடைதற்கு அரிது என்பது பற்றி, “முதலோர் எய்துதற் கரிய பேரின்பம்” என உரைக்கின்றார். தம் இயல்பையும் தம்மை அடிமையாக உடையவனாகிய சிவனது இயல்பையும் உணர்ந்தாலன்றிச் சிவஞானப் பேரொளி பெறலாகாமை பற்றி, “தமை அறிந்த அருட் சார்ந்த பேரொளி” என்று சாற்றுகின்றார். தம்மையறிந்தவர் - ஞானவான்கள். “தம்மை யுணர்ந்து, தமையுடைய தன் உணர்வால், எம்மையுடைமை எமை இகழார்” (சிவஞா. போ) என்று மெய்கண்ட தேவர் உரைத்து அருளுவது காண்க. தயாநிதி - தயையாகிய செல்வம். அருட் செல்வன் ஆதல் பற்றிச் சிவனை, “தயாநிதி” என்கின்றார். பிறர் எவராலும் உணர்த்தலாகாத சிவஞானத்தை, உயிர்க்கு அறிவினுள் அருளால் மன்னி நல்குதலால் சிவனை, “தனிப் பெருந் தந்தை” என்று குறிக்கின்றார். சிவஞானத்தால் சிவன் அருளைப் பெற முயலும் நல்லுயிர்க்குத் துணை புரிந்தருளுதலால் சிவனை, “அமையும் நம்முயிர்க்குத் துணை” என்று சொல்லுகின்றார். ஐயர் - தலைவர். இன்ன பொழுதில் இன்ன வடிவில் எழுந்தருளி இவ்வாறு ஞானம் நல்குவன் என்று யாவராலும் அரியலாகாமையின், “சமயம் இப்போது என்று எண்ணி நான் இருக்கும் தன்மை” என உரைக்கின்றார்.
இதனால், சிவப் பேறு எய்தும் காலத்தை எண்ணி வள்ளற் பெருமான் எதிர் நோக்கி இருக்கும் திறம் இயம்பியவாறாம். (124)
|