3536. இதுவரை அடியேன் அடைந்தவெம் பயமும்
இடர்களும் துன்பமும் எல்லாம்
பொதுவளர் பொருளே பிறர்பொருட் டல்லால்
புலையனேன் பொருட்டல இதுநின்
மதுவளர் மலர்ப்பொற் பதத்துணை அறிய
வகுத்தனன் அடியனேன் தனக்கே
எதிலும்ஓர் ஆசை இலைஇலை பயமும்
இடரும்மற் றிலைஇலை எந்தாய்.
உரை: தில்லையம்பலத்தில் விளங்குகின்ற பரம் பொருளாகிய சிவனே! அடியவனாகிய யான், இதுவரை எய்திய வெவ்விய அச்சங்களும் இடையூறுகளும் துன்பங்களும் ஆகிய எல்லாம் பிறர் பொருட்டே யன்றிப் புலைத்தன்மை யுடைய எளியேன் பொருட்டல்ல; தேன் சொரியும் மலர் போன்ற அழகிய நின் இரண்டு திருவடிகளும் அறிய இதனை நினக்கு விண்ணப்பித்தேன்; அடிமையாகிய எனக்கு எப்பொருளிலும் ஓர் ஆசையில்லை; எந்தையே இதனால் எனக்கு எவ்வகையச்சமும் துன்பமும் வேறு கிடையாது. எ.று.
அறிவு வழங்கிய நாள் தொட்டு இதனை விண்ணப்பிக்கும் நேரம் வரை தொகுத்துக் கூறுகின்றாராதலால், “இதுவரை” என வுரைக்கின்றார். மிக்க பயம் “வெம்பயம்” எனப்படுகிறது. பொது - தில்லையம்பலம். பிறர் பொருட்டுச் செய்த உழைப்பிடையே அச்சமும் இடரும் அவலமும் தோன்றின வென்றற்குப் “பிறர் பொருட் டல்லால் புலையனேன் பொருட்டல” என்றும், அதனை வலியுறுத்தற்கு, இது நின் பதத்துணை அறிய வகுத்தனன்” என மொழிகின்றார். தமது கீழ்மை புலப்படுத்தற்குப் “புலையனேன்” என்று புகல்கின்றார். மலரின்கண் தேன் இருத்தல் இயற்கையாதலால், “மதுவளர் மலர்” என இயம்புகின்றார். பொற் பதம் - அழகிய திருவடி. மலர் என்றது ஈண்டுத் தாமரையைக் குறிக்கிறது. தமக்கு எய்துவனவற்றைப் பொருளாகக் கொள்ளாத தற்றுறவைப் புலப்படுத்தற்கு, “அடியனேன் தனக்கே எதிலும் ஓர் ஆசை யிலை” எனவும், அதனால், “பயமும் இடரும் மற்றிலை” எனவும் உரைக்கின்றார்.
இதனால், தமக்குள் எப்பொருளினும் ஆசை யின்மையையும் அதனால் துன்ப மின்மையும் வள்ளற் பெருமான் எடுத்துரைத்தவாறாம். (127)
|