3537.

     என்னள விலையே என்னினும் பிறர்பால்
          எய்திய கருணையால் எந்தாய்
     உன்னுறு பயமும் இடருமென் தன்னை
          உயிரொடும் தின்கின்ற தந்தோ
     இன்னும்என் றனக்கிவ் விடரொடு பயமும்
          இருந்திடில் என்உயிர் தரியா
     தன்னையும் குருவும் அப்பனும் ஆன
          அமுதனே அளித்தருள் எனையே.

உரை:

     தாயும் தந்தையும் குருவுமாய் ஞானக் கொடையால் அமுதமயமாய் விளங்குகின்ற பெருமானே! என்னைப் பொறுத்த அளவில் துன்பமும் அச்சமும் எனக்கில்லையாயினும், பிறர்பால் என்னுள்ளத்து எழுந்த அருள் உணர்வால் எண்ணத் தக்க அச்ச வகைகளும் என்னை உயிரோடே வருத்துகின்றன எந்தை பெருமானே; என்னை வருத்திய இவ்விடர்களும் அச்சங்களும் இன்னமும் நீங்காமல் எனக்கு உளவாயின் என்னுயிர் தாங்காதாதலால் என்னை ஆதரித்து அருள வேண்டுகிறேன். எ.று.

     யான் உடல் உயிரோடு கூடி வாழ்தல் வேண்டிற்றிலேனாதலால் எனக்கு இடர்களாலும் அச்சங்களாலும் மனக் கவலை யில்லை என்பார், “என்னள விலையே என்னினும்” என உரைக்கின்றார். பிறர் வாழ உதவும் அருள் உள்ளத்தால் பணி வகைகளைச் செய்கின்ற போது அச்சமும் இடரும் அவலமும் பிறவும் என்னைத் தாக்கி வருத்துகின்றன என்பாராய், “பிறர்பால் எய்திய கருணையால் எந்தாய் உன்னுறு பயமும் இடருமென் தன்னை உயிரொடும் தின்கின்ற தந்தோ” என்று கூறுகின்றார். தின்கின்றது என்பது ஒருமை பன்மை மயக்கம். தின்னுதல் - வருத்துதல். “இவை என்னைத் தின்னும் அவர்க் காணலுற்று” (குறள்) என்று சான்றோர் வழங்குவது காண்க. இத்துன்பத் தொடர்புகள் இனித் தன்பால் நீங்குதல் வேண்டும் என்பதற்காக, “இன்னும் என்றனக்கிவ்விடரொடு பயமும் இருந்திடில் என்னுயிர் தரியாது” என்று உரைக்கின்றார். அன்னையும் அப்பனும் குருவுமாய் அருளுவதும், ஞான வானந்தத்தை நல்குவதும் பற்றி, “அளித்தருள் எனையே” என்று கூறுகின்றார்.

     இதனால், பிறர் பொருட்டுப் பணி செய்யும் இடத்துளவாகும் இடர்ப்பாடுகளை வள்ளற் பெருமான் விண்ணப்பித்தவாறாம்.

     (128)