3538. பயத்தொடு துயரும் மறைப்புமா மாயைப்
பற்றொடு வினையும்ஆ ணவமும்
கயத்தவன் மயக்கும் மருட்சியும் எனது
கருத்திலே இனிஒரு கணமும்
வியத்திடத் தரியேன் இவையெலாந் தவிர்த்துன்
மெய்யருள் அளித்திடல் வேண்டும்
உயத்தரு வாயேல் இருக்கின்றேன் இலையேல்
உயிர்விடு கின்றனன் இன்றே.
உரை: உச்சமும் அவலமும் மறைப்பும் மாயை கன்மம் ஆணவ மலம் ஆகிய மூன்றின் பெரிய வலிய மயக்கமும் இவற்றால் விளையும் மருட்கையும் என் மனத்திலே இனி ஒருகண நேரமும் தங்கி வருத்த இடம் கொடேன்; இவற்றை யெல்லாம் போக்கி யுனது மெய்ம்மையான திருவருளை எனக்கு அளித்து உய்வித்தருள வேண்டும்; அங்ஙனம் தந்தால் யான் உயிர் வாழ்வேன், இல்லையேல் என் உயிரை விட்டொழிப்பேன். எ.று.
பயம் - அச்சம். துயர் - அவலம். மறைப்பு - உலகியல் மயக்கத்தால் உள்ளதை உள்ளவாறே உணரும் அறியாமை. மலம் மூன்றனுள் கூறப்படும் மாயை, சுத்தம், அசுத்தம், சுத்தாவசுத்தம், பிரகிருதி ஆகிய பலவகை மாயைகட்கு முதலாதலால் அதனை, “மாமாயை” என்கின்றார். கய - பெருமை. “கயவும் தடவும் நளியும் பெருமை” என்பது தொல்காப்பியம். மருட்சி - ஒன்றைப் பிரிதொன்றாகக் காணும் மருள். “பொருளல்லவற்றைப் பொருள் என்று உணரும் மருள்” (குறள்). வியத்தல் - விரும்பி யுறைதல். பயம் முதலாக மருட்சி ஈறாகக் கூறப்பட்ட அனைத்தும் இனிது உய்தற்குத் தடையாதலால், “இவை யெலாம் தவிர்த்துன் மெய்யருள் அளித்திடல் வேண்டும்” என முறையிடுகின்றார். மெய்யருள் உய்திக்கு ஏதுவாதலால், “உயத் தருவாயேல் இருக்கின்றேன், இலையேல் உயிர் விடுகின்றனன் இன்றே” என்று கூறுகின்றார்.
இதனால், அச்சமும் அவலமும் பிறவும் உய்திப் பேற்றுக்கு இடையூறாதல் தெரிவித்தவாறாம். (129)
|