3539. ஐயநான் பயத்தால் துயரினால் அடைந்த
அடைவைஉள் நினைத்திடுந் தோறும்
வெய்யதீ மூட்டி விடுதல் ஒப்பதுநான்
மிகஇவற் றால்இளைத் திட்டேன்
வையமேல் இனிநான் இவைகளால் இளைக்க
வசமிலேன் இவைஎலாம் தவிர்த்தே
உய்யவைப் பாயேல் இருக்கின்றேன இலையேல்
உயிர்விடு கின்றனன் இன்றே.
உரை: ஐயனாகிய சிவபெருமானே! நான் அச்ச வகைகளாலும் பல்வகைத் துயரங்களாலும் அடைந்த அவலக் கீழ்மைகளை உள்ளத்தில் நினைக்கும் போதெல்லாம் வெவ்விய தீயை விளைவித்து வருத்துவது போல்கின்றமையால் நான் இவற்றால் மிகவும் சோர்ந் தொழிந்தேன்; இவ்வுலகின்கண் இவற்றால் இனியும் நான் வருந்தி மெலியும் திறமில்லேன்; இவை யெல்லாவற்றையும் போக்கி என்னை உய்தி பெற வைப்பாயாயின் யான் வாழ்வேன், இல்லையேல் உயிர் விடுவேன். எ.று.
அச்சம் கீழ் மக்களது பண்பாதலால் அதனைத் தலையாக வைத்துப் பன்முறையும் ஓதுகின்றார். அடைந்த துன்பங்களை “அடைவு” என அறிவிக்கின்றார். அவை காட்சிப் பொருளல்லவாதலின், “உள் நினைந்திடும் தோறும்” என நினைக்கின்றார். அவற்றின் நினைப்பு விளைவிக்கும் வருத்தத்தை “உள் நினைத்திடும் தோறும் வெய்ய தீ மூட்டி விடுதல் ஒப்பது” என்றும், அவற்றால் தமக்கு உண்டாகும் சோர்வை “நான் மிக இவற்றால் இளைத்திட்டேன்” என்றும் உரைக்கின்றார். இனியும் இத்துன்பங்கட்கு இடம் கொடாதபடித் தம்மை யுய்வித்தல் வேண்டும் என வற்புறுத்தற்காக, “வைய மேல் இனி நான் இவைகளால் இளைக்க வசமிலேன்; இவை யெலாம் தவிர்த்தே உய்ய வைப்பாயேல் இருக்கின்றேன், இலையேல் உயிர் விடுகின்றனன் இன்றே” என்று உரைக்கின்றார்.
இதனாலும் பயம் முதலியவற்றால் எய்தும் துயர்க்கு ஆற்றாமை விண்ணப்பித்தவாறாம். (130)
|