3540. பயந்துயர் இடர்உள் மருட்சியா தியஇப்
பகைஎலாம் பற்றறத் தவிர்த்தே
நயந்தநின் அருளார் அமுதளித் தடியேன்
நாடிஈண் டெண்ணிய எல்லாம்
வியந்திடத் தருதல் வேண்டும்ஈ தெனது
விண்ணப்பம் நின்திரு உளத்தே
வயந்தரக் கருதித் தயவுசெய் தருள்க
வள்ளலே சிற்சபை வாழ்வே.
உரை: அருள் வள்ளலே, தில்லையில் ஞான சபையில் எழுந்தருளும் செல்வமாகிய சிவனே; அச்சம், துயர், இடர்ப்பாடுகள், மனமருட்சி முதலிய இப்பகை இயல்புகள் எல்லாம் பற்றற நீக்கி விரும்பப்படுகின்ற நினது அருள் நிறைந்த ஞான வமுதத்தைத் தந்து அடியவனாகிய யான் இவ்வுலகில் எண்ணிய எண்ணங்கள் எல்லாவற்றையும் திருவுளத்தில் எண்ணிக் கண்டோர் வியக்கத் தக்க வகையில் எனக்கு உதவி யருளல் வேண்டும்; இதுவே எனது விண்ணப்பம்; நின்னுடைய திருவுள்ளத்தில் வன்மையுற எண்ணி என்பால் தயவு செய்து அருள்க. எ.று.
உள்மருட்சி - மனமருட்சி; பொருளாய தொன்றைப் பொருளன்று என மருளுதல் மனமருட்சி. அஃதாவது மனத்தின்கண் உளதாகும் மயக்க வுணர்ச்சி. நல்லொழுக்க நல்ஞான நெறிகளுக்கு அச்சம் முதலியயாவும் மாறாய் நின்று தீது பயத்தலின் ‘இப்பகை எலாம்’ எனச் சுட்டிக் கூறுகின்றார். இருந்த இடம் தெரியாமல் போக்கினாலன்றி இவை தீயெச்சம் போலப் பின்னரும் கிளைத்துத் தீங்குறுவிக்கும் என்பது பற்றி, “பற்றறத் தவிர்த்து” எனப் பகருகின்றார். சிவ பரம்பொருளின் திருவருள் ஞானத்தை நல்லோர் அனைவரும் விரும்புதலின், “நயந்த நின் அருளார் அமுதம்” என நவில்கின்றார். யாவரும் கண்டு வியக்கத்தக்க முறையில் யான் எண்ணுகின்ற எண்ணங்கள் எல்லாம் உருவாதல் வேண்டும் என்பதற்காக, “எண்ணிய வெல்லாம் வியந்திடத் தருதல் வேண்டும்” என்று விளம்புகின்றார். வயந்தரல் - மிகைபட அளித்தல்.
இதனால், வள்ளற் பெருமான் தமது விண்ணப்பத்தை முடிய மொழிந்தவாறாம். (131)
|