3544.

     தளர்ந்திடேல் மகனே என்றெனை எடுத்தோர்
          தாய்கையில் கொடுத்தனை அவளோ
     வளர்ந்திடா வகையே நினைந்தனள் போன்று
          மாயமே புரிந்திருக் கின்றாள்
     கிளர்ந்திட எனைத்தான் பெற்றநற் றாயும்
          கேட்பதற் கடைந்திலள் அந்தோ
     உளந்தரு கருணைத் தந்தையே நீயும்
          உற்றிலை பெற்றவர்க் கழகோ.

உரை:

     மகனே, நீ மனம் தளர வேண்டாம் என்று சொல்லி, எனை எடுத்துச் சத்தி வகைகளின் ஒருத்தியாகிய மாயை கையில் கொடுத்தருளினாய்; அவள் நான் வளர்ந்திட லாகாது என்று நினைத்தவள் போல மாயத்தையே செய்து கொண்டிருக்கின்றாள்; அம்மாயத்தினின்றும் நீங்கி யெழுமாறு என்னைப் பெற்ற நற்றாய் ஆகிய அருட் சத்தியும் என் செய்தனை எனக் கேட்டற்கு என்பால் வந்திலள்; ஐயோ, மனம் நிறைந்த கருணை யுருவாகிய தந்தையாகிய சிவனே, நீயும் என்பால் வந்தாயில்லை; பெற்றோர்க்கு இது முறையாகுமா. எ.று.

     செவிலியால் நன்குப் பேணப்படாமையால் சோர்வுற்றுக் கிடந்த ஆன்மாவை மாயையாகிய சத்தியின்பால் கொடுத்த திறத்தை, “தளர்ந்திடேல் மகனே என்றெனை எடுத்தோர் தாய் கையில் கொடுத்தனை” என்றும், அம் மாயை ஆன்ம சிற்சத்தியை வளர விடாது மயக்கமே செய்தமையின், “அவளோ வளர்ந்திட வகையே நினைந்தனள் போன்று மாயமே புரிந்திருக்கின்றாள்” என்றும் உரைக்கின்றார். இது கேவலத்தில் ஆணவ விருளில் படிந்திருந்த ஆன்மாவைச் சகலத்தில் இச்சா ஞானக் கிரியைகளால் உய்தி பெறற் பொருட்டு மாயா காரிய உலகில் புகுத்திய திறமும் அதன்கண் ஆன்மா மயங்கும் திறமும் குறிக்கின்றது. அச்சகலத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து உய்தி பெற உதவுவது அருட் சத்தியாதலின் அதனை, “கிளர்ந்திட எனைத் தான் பெற்ற நற்றாயும் கேட்பதற் கடைந்திலள்” என்று கூறுகின்றார். தாம் பெற்ற மகன் நன்னிலையில் வளர்ந்து சிறப்பதையே தந்தையும் தாயும் விரும்புவாராக, அது செய்யாமை நன்றன்று என்பார், “உளந்தரு கருணைத் தந்தையே நீயும் உற்றிலை” எனவும், சிவமும் சத்தியுமாய்ப் பெற்றோராக விளங்குகின்ற உங்களுக்கு முறையாகாது என விண்ணப்பிப்பாராய், “பெற்றவர்க்கழகோ” எனவும் இயம்புகின்றார்.

     இதனால், ஆன்மா மாயையிற் கிடந்து வளரும் திறம் கூறியவாறாம்.

     (2)