3545.

     தாங்கஎன் தனைஓர் தாய்கையில் கொடுத்தாய்
          தாயவள் நான்தனித் துணர்ந்து
     தூங்கவும் ஒட்டாள் எடுக்கவும் துணியாள்
          சூதையே நினைத்திருக் கின்றாள்
     ஓங்குநற் றாயும் வந்திலாள் அந்தோ
          உளந்தளர் வுற்றனன் நீயும்
     ஈங்குவந் திலையேல் என்செய்கேன் இதுதான்
          எந்தைநின் திருவருட் கழகோ.

உரை:

     பெருமானே, என்னை யாதரித்தற் பொருட்டு மாயையாகிய தாயின் கையில் என்னை விடுத்தருளினாய்; எனக்குத் தாயாகிய அவள் நான் தனியே கிடந்து உண்மை யுணர்ந்து ஒடுங்கவும் விட மாட்டாள்; தனது மாயையின் பிடிப்பிலிருந்து விடுவிக்கவும் நினைய மாட்டாள்; மாய நினைவுகளையே கொண்டிருக்கின்றாள்; இந்நிலையினை யறிந்து உயர்ந்துள்ள அருட் சத்தியாகிய நற்றாயும் வந்தருளுகின்றாளில்லை; ஐயோ, அதனால் நான் மனம் சோர்ந்துள்ளேன்; நீ தானும் என்பால் வாராயாயின், நான் யாது செய்வேன்; இவ்வாறு இருப்பது எந்தையாகிய நின் திருவருட்கு அழகாகுமோ. எ.று.

     உய்தி பெறற் பொருட்டுச் சகலத்தில் மாயைபால் வளர்த்து சிறக்க விடுத்தமை புலப்பட, “தாங்க” என்றும், “தாய் கையில் கொடுத்தாய்” என்றும் இசைக்கின்றார். சகலத்தில் மாயையாகிய சத்தி தனது காரியமாகிய உடல், கருவி, உலகு, போகங்களில் கிடத்தினாளே யன்றி அவற்றின் தொடர்பின்றித் திருவருளை யுணர்ந்து அதன்கண் தோய்ந்து ஒடுங்க விடுகின்றாளில்லை என்பாராய், “தாயவள் நான் தனித் துணர்ந்து தூங்கவும் ஒட்டாள்” என்றும், தான் தானும் சகல மயக்கத்தில் அழுந்தாவாறு என்னை யுய்விக்க நினைக்கின்றாள் இல்லை; மாயா உலக போகங்களிலேயே அழுத்துகின்றாள் என்பாராய், “சூதையே நினைத்திருக்கின்றாள்” என்றும் உரைக்கின்றார். திருவருள் ஞானம் எய்தாமை புலப்பட, “நற்றாயும் வந்திலாள்” என்று கூறுகின்றார். திருவருள் ஞான வாயிலாக அன்றிச் சிவஞானம் எய்துதல் இல்லாமையால், “நீயும் ஈங்கு வந்திலையேல் என் செய்கேன்” என மொழிகின்றார்.

     இதனால், சகலம் நல்கும் போகங்களில் அழுந்தும் ஆன்மா, சிவ ஞானம் எய்தாமைக்கு வருந்துமாறு தெரிவித்தவாறாம்.

     (3)