3546.

     அத்தநீ எனைஓர் தாய்கையில் கொடுத்தாய்
          ஆங்கவள் மகள்கையில் கொடுத்தாள்
     நித்திய மகள்ஓர் நீலிபாற் கொடுத்தாள்
          நீலியோ தன்புடை ஆடும்
     தத்துவ மடவார் தங்கையில் கொடுத்தாள்
          தனித்தனி அவர்அவர் எடுத்தே
     கத்தவெம் பயமே காட்டினர் நாணும்
          கலங்கினேன் கலங்கிடல் அழகோ.

உரை:

     தந்தையே, தலைவனே, கேவலத்தில் கிடந்த என்னை அருள் கூர்ந்து மாயையாகிய தாயின் கையில் கொடுத்தருளினாய்; அவள் சுத்த மாயையாகிய தன் மகள் கையில் கொடுக்க, நிலைபெற்ற அவள் பிரகிருதி மாயையாகிய நீலியிடம் என்னை விடுத்தாள்; நீலியாகிய அம்மாயை தன் பக்கல் சூழ்ந்துலவும் தத்துவங்களாகிய மகளிரிடையே என்னை விடுத்தாள்; அவர்கள் தனித் தனியாகத் தம்மொடு கூட்டி மிக்க அச்சத்தையே உண்டாக்கினர்; நானும் அவர்களால் நிலை கலங்கினேன்; இது முறையாகுமா. எ.று.

     அத்தன் - தந்தை. கத்தன் - தலைவன்; கருத்தன் என்பது கத்தன் என வந்தது. சுத்த மாயையினின்றும் தோன்றுதலால் அறிவிச்சை செயல்களை எழுப்பும் அசுத்த மாயையை, “மகள்” என்று குறிப்பிடுகின்றார். பிரகிருதி மாயையும் அதுபோல் மாயையில் தோன்றியதாதலால் அதனை “நித்திய மகள்” என்றும், ஆன்ம வறிவை மறைக்கும் இயல்பால் “நீலி” என்றும் கூறுகின்றார். ஆன்ம தத்துவம் இருபத்துநான்கும், பிரகிருதி மாயை இடமாக நின்று ஆன்மாவை யலைப்பது பற்றி, “நீலியோ தன்புடை யாடும் மடவார்தம் கையில் கொடுத்தாள்” என்றும், அத்தத்துவங்களால் அச்சமும் அவலமும் உற்று ஆன்மா அலைக்கப்படுவது பற்றி, “தனித்தனி அவரவர் எடுத்தே வெம்பயமே காட்டினர்” என்றும், “நானும் கலங்கினேன்” என்றும் கூறுகின்றார்.

     இதனால், மாயையின் கூறுகளான அசுத்த மாயை, மூலப் பகுதி, தத்துவ வகைகள் ஆகியவற்றின்கண் கிடந்து வருந்தும் திறம் கூறியவாறாம்.

     (4)