3548. வலத்திலே செவிலி எடுத்திடச் சோம்பி
மக்கள்பால் காட்டிவிட் டிருந்தாள்
மலத்திலே உழைத்துக் கிடந்தழல் கேட்டும்
வந்தெனை எடுத்திலார் அவரும்
இலத்திலே கூடி ஆடுகின் றனர்நான்
என்செய்வேன் என்னுடை அருமை
நிலத்திலே அவர்கள் அறிந்திலார் பெற்றோய்
நீயம்இங் கறிந்திலை யேயோ.
உரை: பரையாகிய செவிலி ஞான நெறியிலே என்னை நிறுத்தி வளர்க்கச் சோம்பலுற்று, பிறந்திறந் துழலும் சகலத்தில் மக்கள் கூட்டத்தைக் காட்டி என்னை அதன்கண் விட்டு விட்டாள்; நான் அறியாமையாகிய மலத்திலே யிருந்து உழைத்து அதன் கண்ணே கிடந்து புலம்புவதைக் கேட்டும் என்னை அதனின்றும் எடுத்தற் பொருட்டு மக்கள் யாரும் வந்திலர்; தத்தமக்குரிய இடத்திலேயிருந்து தம்மிற் கூடி விளையாடுகின்றார்கள்; நான் யாது செய்வேன்; என்னுடைய அருமையை நிலவுலகத்தில் அவர்கள் அறிகின்றார்களில்லை; என்னைப் பெற்ற தந்தையாகிய நீயும் அறியாது ஒழிந்தனையோ, கூறுக. எ.று.
வலம் - ஞான நெறி மேற்று. ஞானிகள் கூட்டத்தில் தம்மை யிருத்தாமல் உலகியலில் கிடந்துழலும் மக்களிடையே வாழ்வித்தமை பற்றி வருந்துகின்றாராதலின், “மக்கள்பால் காட்டி விட்டிருந்தாள் மலத்திலே உழைத்துக் கிடந்தழல் கேட்டும் வந்தெனை எடுத்திலார் அவரும்” எனவுரைக்கின்றார். உலக மக்கள் தாமும் தத்தமக்குரிய வாழ்க்கைப் போக்கிலே பலராய்க் கூடிச் செல்லுகின்றமை பற்றி, “இலத்திலே கூடியாடுகின்றனர். என இயம்புகின்றார். இலம் - ஈண்டு வாழ்க்கை நெறி குறித்தது. தாம் உணர்த்தும் சமரச சுத்த சன்மார்க்க நெறியினைக் கேட்டுச் சிந்திக்காமை புலப்படுத்த, “என்னுடைய அருமை நிலத்திலே அவர்கள் அறிந்திலார்” என்றும், அவர்களை நெறிப்படுத்தும் செயல் வகைகளை யுணர்த்தற் பொருட்டு ஆவன செய்தற்கு உரிய அறிவு உணர்த்தாமை பற்றி, “நீயும் இங்கறிந்திலையே” என்றும் கூறுகின்றார்.
இதனால், தமது சுத்த சன்மார்க்க நெறியினை மக்கள் உணராமைக்கு வருந்தியவாறாம். (6)
|