3549.

     தும்மினேன் வெதும்பித் தொட்டிலிற் கிடந்தே
          சோர்ந்தழு திளைத்துமென் குரலும்
     கம்மினேன் செவிலி அம்மிபோல் அசையாள்
          காதுறக் கேட்டிருக் கின்றாள்
     செம்மியே மடவார் கொம்மியே பாடிச்
          சிரித்திருக் கின்றனர் அந்தோ
     இம்மியே எனினும் ஈந்திடார் போல
          இருப்பதோ நீயும்எந் தாயே.

உரை:

     தொட்டிற் பருவத்து இளங் குழவி போலச் சகல வுடம்பினுள் தும்பியும் வெதும்பியும் அழுதழுது சோர்ந்தும் மெல்லிய குரலோசையும் கம்மினேனாக, செவிலியாகிய பரையும் அம்மிக் கற்போல் அசைவின்றி என் அழுகுரலைக் காதாரக் கேட்டுக் கொண்டிருக்கின்றாள்; சூழ வுள்ள தத்துவ மகளிர் கண்டு கொம்மி கொட்டி விளையாடி மகிழ்கின்றனர்; சிறிதளவும் ஈதலுள்ளம் இல்லாத செல்வர்களைப் போல, எந்தையாகிய சிவனே, நீ வாளா விருத்தல் கூடாது. எ.று.

     தொட்டிலிற் கிடக்கும் குழவி குளரால் தும்மியும் வெப்பத்தால் வெம்பியும் அழுது சோர்ந்து குரம் கம்மிச் சோர்வது போலச் சகலாவத்தையில் ஆன்மா உடம்பினுள் இருந்து வளரும் திறம் இவ்வுவமையால் விளக்கப்படுகிறது. பால் வேண்டும் கருத்தாற் குழவி அழுது சோர்தல் போல அருள் ஞானப் பேறு குறித்துச் சகல வாழ்வில் இருத்திய பரையாகிய சத்தி ஆன்ம ஞான வளர்ச்சி குறித்துக் கருவிகளை இயக்குவதோடு நின்றொழிதலால், “செவிலி அம்மி போல் அசையாள் காதுறக் கேட்டிருக்கின்றாள்” எனக் கூறுகின்றார். உடல், கருவி, கரணங்களை நல்கி ஆன்மா தனது சிற்சத்தி கொண்டு வாழச் செய்வது பரையாகிய சத்தியின் தொழிலாக, வாழும் ஆன்மா அழுதும் சோர்ந்தும் தெளிந்தும் ஞானப் பேற்றுக்குரிய பக்குவத்தை யடையும் என அறிக. தத்துவம் முப்பத்தாறும் ஆன்ம வாழ்வுக்குத் துணை புரிந்து ஊக்குவனவாதலால் இதனைச் “செம்மிய மடவார் கொம்மியே பாடிச் சிரித்திருக்கின்றனர்” என்று கூறுகின்றார். செம்முதல் - மூடி மறைப்பது போல் சூழ நிரல்பட நின்றொழுகுதல் குறித்தது. “யானை மதத் தொனை செம்மிற்றன்றே” (இரா. எழுச்சி) எனக் கம்பர் வழங்குவது காண்க. மடவார் - மகளிராகிய தத்துவங்கள். “தத்துவ மடவார் தங்கையில் கொடுத்தாள்” (3546) என்றதை யறிக. ஆன்மாத் தன் கருவி கரணங்களை யியக்கி வாழ்வாங்கு வாழ்ந்து பக்குவ மெய்துவதை நோக்கி யிருத்தல் பற்றி, “ஈந்திடார் போல இருப்பதோ நீயும் எந்தாய்” என இயம்புகின்றார்.

     இதனால், மாயா காரியங்களாகிய தத்துவங்களினிடையே ஆன்மா கிடந்து ஞானப் பேறு வேண்டி முயலும் திறம் மொழிந்தவாறாம்.

     (7)