3552. ஞானஆ னந்த வல்லியாம் பிரியா
நாயகி யுடன்எழுந் தருளி
ஈனம்ஆர் இடர்நீத் தெடுத்தெனை அணைத்தே
இன்அமு தனைத்தையும் அருத்தி
ஊனம்ஒன் றில்லா தோங்குமெய்த் தலத்தில்
உறப்புரிந் தெனைப்பிரியாமல்
வானமும் புவியும் மதிக்கவாழ்ந் தருள்க
மாமணி மன்றில்எந் தாயே.
உரை: பெரிய மணிகள் இழைத்த தில்லையம்பலத்தில் எழுந்தருளும் சிவபெருமானே, இன்ப ஞானவல்லியாகிய பிரியா மடந்தை எனப்படும் உமாதேவியுடன் எழுந்தருளிக் கீழ்மை விளைவிக்கும் இடர்களைப் போக்கி என்னையும் தன்பால் சேர்த்து, இனிதாகிய ஞான வமுதத்தை முழுதும் யான் உண்பித்துக் குற்றமின்றியுயர்ந்தோங்கும் மெய்ம்மை யின்ப நிலையில் எனை இருக்கச் செய்து என்னையும் பிரியாமல் விண்ணவரும் மண்ணவரும் நன்கு வியக்க வாழ்க. எ.று.
செம்மை, நீலம், பச்சை என வரும் பன்னிற மணிகள் வைத்து இழைக்கப் பெற்ற செல்வ ஞான சபையாதலால், தில்லைப் பொன்னம்பலம் “மாமணி மன்று” எனப்படுகின்றது. சிவஞானத்தால் விளையும் இன்பமே யுருவாகியவளாதலால், உமாதேவியை “ஞான வானந்த வல்லி” எனப் புகழ்கின்றார். வல்லி - பூங்கொடி; பூங்கொடி போல்வது பற்றி, “வல்லி” எனக் கூறுகின்றார். தனது திருமேனியில் ஒரு கூறாக வுடையனாதலால், உமாதேவி “பிரியா நாயகி” எனப்படுகின்றாள். எய்தும் இடர்கள் பலவும் அறிவைச் சுருக்கிக் கீழ்மை யுறுவிப்பனவாதலால், “ஈனமார் இடர்” என இயம்புகின்றார். இன்னமுது - சிவ ஞானம். அமுது போல் இன்பம் செய்தலின், ஞானம் அமுது எனக் குறிக்கப்படுகிறது. ஊனம் - குற்றம். மெய்த் தலம் - சிவபோகத்தை நுகருமிடம். சிவபோக மெய்த்தலத்தும், சிவனையின்றிப் போக நுகர்ச்சி எய்தாமையால், “எனைப் பிரியாமல்” என வேண்டுகின்றார்.
இதனால், வள்ளற் பெருமான் மாயையின் நீக்கிச் சிவஞானமாகிய அமுதூட்டிச் சிவபோக நிலையத்தில் தம்மை யிருத்திப் பிரியா நாயகியுடன் தம்மை விட்டு நீங்காது எழுந்தருள்க என வேண்டிக் கொண்டவாறாம். (10)
|