15. அபயத் திறன்

    அஃதாவது, அபயம் வேண்டுதற் குரிய தீய குணஞ் செயல்களால் விளையும் தீமைகளை எடுத்தோதி அஞ்ச வேண்டா என அபயம் அருளுமாறு முறையிடுவது. அபயமாவது செய்த குற்றங்கட்கு என்ன தீமை விளையுமோ எனப் பயந்து வருந்துகிற பொழுது பயப்பட வேண்டா என அருள்வது; அஞ்சா நிலையினைத் தருவது என்றுமாம். இதன்கண், வடலூர் வள்ளல் தம் வாட்ட மெலாம் தவிர்த்து அற்றமும் மறைக்கும் அறிவலாது ஓடி யாடிய சிறுபருவத்தே தம்மை ஆட்கொண்டருளிய இறைவன், தமக்கு “ஊன் பெறும் உயிரும், உணர்ச்சியும், அன்பும், ஊக்கமும், உண்மையும், தம்மைத் தாம் பெறு தாயும், தந்தையும், குருவும், தனிப் பெருந் தெய்வமும், தவமும், வான் பெறு பொருளும் வாழ்வும், நற்றுணையும், மக்களும், மனைவியும், உறவும், தாம் பெறும் பண்பும் எல்லாமாக இருக்கிறான்” என்றும், தாம் சமய வாழ்க்கை யிலாவது வேறு பொய்ந்நெறி ஒழுக்கத்திலாவது தொடர்புற்றதில்லை என்றும், தமக்குத் துயரம் வந்தெய்திய போதும் இறைவனைத் தவிர்த்து வேறு யாரையும் கனவிலும் கருதியதில்லை என்றும், “புண்படா வுடம்பும் புரைபடா மனமும் பொய்படா ஒழுக்கமும் பொருந்திக் கண் படாது இரவும் பகலும் இறைவனையே கருத்தில் வைத்து ஏத்துதற்கு இசைந்தார்” என்றும், தம் வடிவமும், வண்ணமும், உயிரும், தேட்டமும் இறைவன் எடுத்துக் கொண்டு அவனுடைய கருணைத் தேகமும், உருவும், மெய்ச் சிவமும், ஈட்டமும், எல்லாம் வல்ல அவன் அருட் பேரின்பமும், அன்பும், மெய்ஞ்ஞான நாட்டமும் கொடுத்துக் காப்பது அவன் கடன் என்றும், அருள் விருப்பமின்மை, பொய்ம்மை, உலகியல் சார்பு, மண் பெண் பொன் மயக்கம், கொலை புலை இறை எண்ணம் இல்லாமை, வேற்று வினை, கள்ளம், கள்ளருந்தல் ஆகிய இவை யெலாம் அந்நாள் உடையரோ, இலனே; இந்த நாள் இறைவன் அருளால் அந்நவை யெலாம் தளர்ந்து தூயனாய் நின்று இறைவனையே நம்பி யிருக்கும் தம்மைக் கைவிடக் கூடாது என்றும், பிறவும் கூறுகின்றார். இது பாலகிருஷ்ண பிள்ளையவர்களின் தொகுப்புரை.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3553.

     ஆடக மணிப்பொற் குன்றமே என்னை
          ஆண்டுகொண் டருளிய பொருளே
     வீடகத் தேற்றும் விளக்கமே விளக்கின்
          மெய்யொளிக் குள்ளொளி வியப்பே
     வாடகச் சிறியேன் வாட்டங்கள் எல்லாம்
          தவிர்த்தருள் வழங்கிய மன்றில்
     நாடகக் கருணை நாதனே உன்னை
          நம்பினேன் கைவிடேல் எனையே.

உரை:

     ஆடகப் பொன்னின் நிறமும் ஒளியுமுடைய அழகிய குன்று போன்ற சிவபெருமானே, எளியனாகிய என்னை ஆண்டளுகின்ற பெருமானே, வீடுகளில் ஏற்றப்படுகின்ற விளக்குப் போல்பவனே, விளக்கின்கண் உருவாய் விளங்கும் ஒளிக்கு உள்ளொளியாய்த் திகழும் வியத்தகு ஒளியே; வருந்துகின்ற மனத்தை யுடைய சிறுமை யுடையவனாகிய என் வருத்த மெல்லாம் போக்கி அருளறிவு தந்து சிறக்கும் தில்லையம்பலத்தில் ஞான நாடகம் புரியும் கருணை யுருவாகிய தலைவனே” உன்னையே விரும்புகின்றேனாதலால் என்னை நீ கைவிடலாகாது. எ.று.

     ஆடகப் பொன் மணிக் குன்றமே என இயைத்துக் கொள்க ஆடகம் - பொன் வகை நான்கனுள் ஒன்று. மாற்றுயர்ந்த பொன்னின் நிறமும் ஒளியுமுடைய திருமேனியை யுடையனாதல் பற்றிச் சிவனை “ஆடகப் பொற் குன்றமே” எனப் புகழ்கின்றார். மணி - அழகு. அக்குமணி யணிந்திருப்பது விளங்க, “மணிப் பொற் குன்றமே” என்கின்றார். எனினும் பொருந்தும். கேவலத்திற் செயலற்றுக் கிடந்த ஆன்மாவுக்கு உலகு உடல் கருவி காரணங்களைத் தந்து வாழ்வித்தமை நினைந்து “என்னை ஆண்டு கொண்டருளிய பொருளே” என வுரைக்கின்றார். பொருள் - பரம்பொருள். விளக்கில் திரியின்கண் நின்றெரியும் ஒளியை “மெய்யொளி” என்றும், அதன் உள்ளொளியாய் நீலமும் செம்மையுமுடைய நிறம் கொண் டொளிர்வதை “உள்ளொளி” என்றும், நுணுகி நோக்குவோர்க்கு வியப்பளித்தலின், “வியப்பே” என்றும் விளம்புகின்றார். வருத்தம் மிக்கு எண்ணத்தாற் சுருங்கிய மனமுடைமை பற்றி, “வாடகச் சிறியேன்” எனக் கூறுகின்றார். வருத்த மிகுதி புலப்பட, “வாட்டங்கள்” என்று குறிக்கின்றார். கண்டு பணிந்து காதலித்தேத்துவோர் கவலை யகன்று தெளிந்த அறிவு பெறுதலால், “வாட்டங்கள் தவிர்த்து அருள் வழங்கிய மன்றிற் கருணை நாதனே” எனப் பரவுகின்றார். நம்புதல் - விரும்புதல். “நம்புவார்க் கன்பர் போலும்” (நாகை) என நாவுக்கரசர் நவில்வது காண்க.

     இதனால் நம்பும் தம்மைக் கைவிடல் வேண்டா என முறையிட்டவாறாம்.

     (1)