3555. புல்லவா மனத்தேன் என்னினும் சமயம்
புகுதவா பொய்ந்நெறி ஒழுக்கம்
சொல்லவா பிறரைத் துதிக்கவா சிறிதோர்
சொப்பனத் தாயினும் நினையேன்
கல்லவா மனத்தோர் உறவையுங் கருதேன்
கனகமா மன்றிலே நடிக்கும்
நல்லவா எல்லாம் வல்லவா உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.
உரை: அவா நிறைந்த மனத்தை யுடையவனாயினும் வேற்றுச் சமயங்களில் புகவோ பொய்யான நெறிகளை ஒழுக்கமாகச் சொல்லவோ பிற தெய்வங்களைத் துதிக்கவோ ஒருசிறிதும் ஒருகனவிலும் நான் நினைத்ததில்லை; கற் போன்ற மனத்தை யுடையவரது தொடர்பையும் எண்ணியதில்லை; பொற் சபையில் திருக்கூத்து இயற்றும் நல்லவனும் எல்லாம் வல்லவனுமாகிய உன்னையே நம்பி யுரைக்கின்றேனாதலால் என்னைக் கைவிடலாகாது. எ.று.
அவா - புல்லிய மனத்தை யுடையவன் என்பது “புல்லவா மனத்தேன்” என்று வந்தது. புல்லுதல் - பொருந்துதல். புல்லவா மனத்தேன் என்பதற்குப் புன்மை பயக்கும் அவாக்களால் நிறைந்த மனத்தை யுடையவன் என்று பொருள் கூறுவதும் உண்டு. சைவ சமயத்துள் நின்று பேசுகின்றாராதலால் ஈண்டுச் சமயம் என்றது வேற்றுச் சமயமாயிற்று. உலகியலில் பலர் பலவேறு பொய் ஒழுக்கங்களைக் கற்பித்து மக்கள் பலரைத் தம் வயப்படுத்திச் செல்லுதலால், “பொய்ந் நெறி ஒழுக்கம் சொல்லவா” என்று சொல்லுகின்றார். பிறரைத் துதிக்கவா என்றவிடத்து, பிறர் என்றது சிவனை ஒழிந்த பிற தெய்வங்களை. “உள்ளேன் பிற தெய்வங்கள் உன்னை யல்லாது எங்கள் உத்தமனே” (சதகம்) என்று திருவாதவூரர் மொழிவது காண்க. சொப்பனம் - கனவு; கல்லவா மனம் - கல்லொப்பக் கடினம் உடைய மனம். இரக்கமில்லாத பண்பினராதலால், “கல்லவா மனத்தோர் உறவைக் கருதேன்” என வுரைக்கின்றார். பொற் சபையில் நடைபெறும் சிவ நடனம் ஆன்மாக்கள் உய்தி பெறும் பொருட்டு நிகழ்வதாதலால், “கனக மாமன்றிலே நடிக்கும் நல்லவா” எனவும், ஆன்மாக்களை அனாதியே பிணித்து வருத்தும் மலத் தொடர்பை நீக்குதல் பற்றி, “எல்லாம் வல்லவா” என இயம்புகின்றார். அவா கொண்டு தவறு செய்வதைக் கனவிலும் நினையேனாதலின், “நல்லவரும் வல்லவருமாகிய உன்னை நம்பி வாழ்கின்றேன்” என வற்புறுத்துகின்றார்.
இதனால், நம்பி வாழும் தன்னைக் கைவிட லாகாது என இறைவனை வேண்டியவாறாம். (3)
|