3556.

     புண்படா உடம்பும் புரைபடா மனமும்
          பொய்படா ஒழுக்கமும் பொருந்திக்
     கண்படா திரவும் பகலும்நின் தனையே
          கருத்தில்வைத் தேத்துதற் கிசைந்தேன்
     உண்பனே எனினும் உடுப்பனே எனினும்
          உலகரை நம்பிலேன் எனது
     நண்பனே நலஞ்சார் பண்பனே உனையே
          நம்பினேன் கைவிடேல் எனையே.

உரை:

     புண் உண்டாகாத வுடம்பும், குற்றப்படாத மனமும், பொய் யில்லாத ஒழுக்கமும் மேற்கொண்டு கண்ணுறக்க மின்றி இரவும் பகலும் உன்னையே நினைவிற் கொண்டு வழிபடுவதற்கு ஒருப்பட்டு இருக்கின்றேன்; உண்பன உண்ணுமிடத்தும் உடுப்பன உடுக்குமிடத்தும் உலக மக்களை நான் நம்புவதில்லை; எனக்கு நண்பனும் நலம் செய்யும் பண்புடைய தோழனுமாகிய உன்னையே நம்பி வாழ்கின்றேனாதலால் என்னைக் கைவிடுதல் கூடாது. எ.று.

     நோய் வகையாலும் பிற செயற்கை வகையாலும் எனது உடல் புண்பட்டதில்லை என்பதற்கு, “புண்படா வுடம்பு” எனப் புகல்கின்றார். காம, வெகுளி மயக்கங்களாலும் குற்ற நினைவுகளாலும் அழுக்குறாதது என் மனம் என்பார், “புரைபடா மனம்” என்று சொல்லுகின்றார். தீய வொழுக்கம் - பொய்படா ஒழுக்கம் எனப்படுகிறது. கண் படுதல் - உறங்குதல். கருத்தில் வைத்து ஏற்றுதல் - மனத்தின்கண் இடையறவின்றி வழிபடுதல். உண்பன உண்டற்கும் உடுப்பன உடுத்தற்கும் உலகில் பிறரை நம்பியே வாழ்தல் வேண்டு மென்னும் நான் அது செய்கிலேன் என்பாராய், “உண்பனே யெனினும் உடுப்பனே யெனினும் உலகரை நம்பிலேன்” என நவில்கின்றார். நண்பன் - அருகில் இருப்பவன். தோழன், நல்ல பண்புடையார் அனைவரும் தோழராதற்கு உரியராயினும் ஞான நலம் சான்றது பற்றிச் சிவபெருமானை, “நலஞ்சார் பண்பனே” எனப் புகழ்கின்றார்.

     இதனால், உலகத்தவரை நம்பாது சிவனையே நம்புவதால் தன்னைக் கைவிட லாகாது என முறையிட்டவாறாம்.

     (4)