3557. புண்ணிலே புகுந்த கோல்எனத் துயரம்
புகுந்தெனைக் கலக்கிய போதும்
கண்ணிலே எனது கருத்திலே கலந்த
கருத்தனே நின்றனை அல்லால்
மண்ணிலே வயங்கும் வானிலே பிறரை
மதித்திலேன் மதிக்கின்றார் தமையும்
நண்ணிலேன் வேறொன் றெண்ணிலேன் உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.
உரை: கண் வழி நுழைந்து என் கருத்தில் கலந்து கொண்டிருக்கின்ற தலைவனே! உடம்பில் உண்டாகிய புண்ணில் நுழைந்த நாராசம் போல் என்னுள்ளத்தில் துயரம் புகுந்து நோய் செய்த போதும் உன்னைத் தவிர மண்ணிலும் விண்ணிலும் விளக்கமுறுகின்ற மக்களையோ தேவர்களையோ பிறரையோ நினைப்ப தில்லேன்; அவர்களைப் பொருளாக மதிக்கின்றவர்களையும் நான் நெருங்குவதில்லை; வேறு யாதனையும் எண்ணாமல் உன்னையே நம்பி யுள்ளேன், ஆதலால் என்னைக் கைவிடலாகாது. எ.று.
சிவபெருமானுடைய உருவத் திருமேனியைக் கண்ணிற் கண்டு கருத்தில் இருத்தி நினைந்து நினைந்து வழிபடுவராதலால் , “கண்ணிலே எனது கருத்திலே கலந்த கருத்தனே” என்று கூறுகின்றார். உடம்பில் உண்டாகிய புண்ணில் யாது படினும் துன்பம் எய்துமாயினும் அதன் கண் கூரிய அம்போ வேலோ நுழையுமாயின் உண்டாகும் துன்பத்திற்கு எல்லையில்லை; அத்தகைய துன்பம் உண்டாகுமாயின் நினைவு முழுதும் அதனுட் கலந்து துன்ப மயமாகுமாதலின், “புண்ணிலே புகுந்த கோல் எனத் துயரம் புகுந்தெனைக் கலக்கிய போதும்” என்று உரைக்கின்றார். துயரம் மிக்க வழி அறிவு செயலற்றுப் போகுமாயினும், எனது அறிவு அங்ஙனம் அறைபோகுவ தன்றென விளம்புவாராய், “துயரம் புகுந்தெனைக் கலக்கிய போதும் நின்றனை யல்லால் பிறரை மதிக்கிலேன்” என்றும், மதித்து ஒழுகுபவர்களையும் பொருளாகக் கருதவில்லை யென்றற்கு, “மதிக்கின்றார் தமையும் நண்ணிலேன்” என்றும், மதிப்பதால் வரும் நலத்தையோ, மதிக்காமல் வரும் கேட்டையோ நான் எண்ணுவதில்லை என்றற்கு, “வேறொன் றெண்ணிலேன்” என்று விளம்புகின்றார். மண்ணிலே வயங்கும் வானிலே பிறரை” என்பதை மண்ணிலே வயங்கும் பிறரை, வானிலே வயங்கும் பிறரை என மாறி இயைத்துக் கொள்க. காணப்படுதலின் மண்ணிலே வயங்கும் பிறரை முதற்கண் எடுத்து மொழிகின்றார்.
இதனால் கைவிடலாகாமைக் குரிய காரணம் விளக்கியவாறாம். (5)
|