3558. ஊன்பெறும் உயிரும் உணர்ச்சியும்அன்பும்
ஊக்கமும் உண்மையும் என்னைத்
தான்பெறு தாயும் தந்தையும் குருவும்
தனிப்பெருந் தெய்வமுந் தவமும்
வான்பெறு பொருளும் வாழ்வும்நற் றுணையும்
மக்களும் மனைவியும் உறவும்
நான்பெறு நண்பும் யாவும்நீ என்றே
நம்பினேன் கைவிடேல் எனையே.
உரை: என் உடம்பிடத்தே இடம் பெறும் என்னுயிரும் உணர்வும், என்னுள்ளத்து அன்பும் ஊக்கமும் உண்மைத் தன்மையும், என்னைப் பெற்ற தாயும் தந்தையும் குருவும், ஒப்பற்ற பெரிய தெய்வமும், செய்யத் தக்க தவமும், பெருமை தரும் செல்வமும் வாழ்வும், நல்ல துணைவரும் மக்களும் மனைவியும் உறவினரும், நான் பெறுகின்ற நண்பர்களும் எல்லாம் நீ என்றே நம்பி யுள்ளேனாதலால் என்னைக் கைவிட வேண்டா. எ.று.
உடம்பின் வேறாகக் காணப்படுவ தன்மையின், உயிரை “ஊன் பெறும் உயிர்” எனவும், உயிருண்மை அதன் உடம்பிடத்து நிகழும் உணர்வால் காணப்படுதலின், “உணர்ச்சியும்” எனவும் சேர்த்துக் கூறுகின்றார். அன்பு - தொடர்பு உடையாரிடத்து உண்டாகும் பற்று; காதலுமாம். ஊக்கம் - உள்ளத்தின் எழுச்சி. உண்மை - உள்ளதன் உண்மையும் இல்லதன் இன்மையும் தெளிய உணரும் உண்மை யுணர்வு. தாயாகவும் தந்தையாகவும் குருவாகவும் நன்னெறிப் படுத்துதலின், “தனிப் பெருந் தெய்வம்” எனச் சிறப்பிக்கின்றார். தவம் - உற்ற நோய் பொறுத்தலும் பிற உயிர்கட்கு உறுகண் செய்யாமையுமாம். வான் - பெருமை. உலகியலில் ஒருவனுக்குச் சிறப்பும் பெருமையும் தருவது செல்வமாதலால், அதனை “வான் பெறு பொருள்” என வழுத்துகின்றார். நற்றுணை - நல்ஞான நல்லொழுக்கங்களைத் தந்து ஓம்பும் துணைவன்.
இதனால், உயிர் உணர்ச்சி முதலாக உறவும் நட்பும் ஈறாகக் கூறியவனைத்தும் சிவமே என நம்பினமை எடுத்தோதித் தம்மைக் கைவிடாது அருள வேண்டியவாறாம். (6)
|