3559. வாட்டமும் துயரும் அச்சமும் தவிர்த்தென்
வடிவமும் வண்ணமும் உயிரும்
தேட்டமும் நீயே கொண்டுநின் கருணைத்
தேகமும் உருவும்மெய்ச் சிவமும்
நட்டமும் எல்லாம் வல்லநின் அருட்பேர்
இன்பமும் அன்பும்மெய்ஞ் ஞான
நாட்டமும் கொடுத்துக் காப்பதுன் கடன்நான்
நம்பினேன் கைவிடேல் எனையே.
உரை: என் வருத்தங்களையும் துயரத்தையும் அச்சத்தையும் போக்கி என் வடிவத்தையும் வண்ணத்தையும் உயிரையும் நான் தேடி வைத்துள்ள வினைப் பயன்களையும் நீ கொண்டு நின்னுடைய அருட்டிரு மேனியையும், உருவத்தையும், மெய்ம்மைச் சிவமாம் தன்மையையும், நினது அருட்பெருக்கையும், எல்லாம் வல்ல நின்னுடைய திருவருட் பேரின்பத்தையும், மெய்யன்பையும், மெய்ம்மை ஞானக்காட்சியையும் எளியேனுக்குத் தந்து உன்னையே நம்பினேன் ஆகையால், என்னைக் காப்பதும் உனது கடமையாகும்; ஆதலால், என்னைக் கைவிடலாகாது. எ.று.
வாட்டம் - துன்பத்தால் உளதாகும் உடல் மெலிவு. வடிவம் - மக்கள் வடிவம். வண்ணம் - குணஞ் செயல்கள். தேட்டம் - மனம் மொழி மெய்களால் செய்த வினைப் பயன். இறைவனுடைய திருமேனி திருவருள் மயமாதலின், அதனை, “நின் கருணைத் தேகம்” எனச் சிறப்பிக்கின்றார். மெய்ச் சிவம் -நிலைத்த சிவமாம் தன்மை. சிவம் - மங்கலம் நிறைந்த இன்பம். நலம் என்பன வனைத்தும் திரண்ட சிவபோகத்தை யுடையவனாதலால் அவனது போகத்தை ‘ஈட்டம்’ என்கின்றார். அருட் பேரின்பம் - திருவருளால் உலக உயிர்கட்கு உளதாகும் மிக்க இன்பம். மெய்ஞ்ஞான நாட்டம் - உண்மையுணர்வால் சிவானந்தத்தைப் பெறும் காட்சித் திறம். ஞான நாட்டம் எய்தினாலன்றிச் சிவஞான சிவபோகங்களைப் பெறுதல் ஆகாமையின் அதனை, மெய்ஞ்ஞான நாட்டம் என இறுதிக்கண் வைத்து வற்புறுத்துகின்றார்.
இதனால், சிவபோகம் பெறுதற்குரிய மெய்ஞ்ஞான நாட்டமும் சிவமாம் தன்மையும் அருள வேண்டுமெனச் சிவனை வேண்டியவாறாம். (7)
|