3560. வம்பனேன் பிறர்போல் வையமும் வானும்
மற்றவும் மதித்திலேன் மதஞ்சார்
உம்பனேர் அகங்கா ரந்தவிர்ந் தெல்லா
உலகமும் வாழ்கவென் றிருந்தேன்
செம்பொனே கருணைத் தெய்வமே எல்லாம்
செயவல்ல சித்தனே சிவனே
நம்பனே ஞான நாதனே உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.
உரை: செவ்விய பொன் போன்ற திருமேனியையுடையவனே; கருணையுருவாகிய தெய்வமே, எல்லாவற்றையும் செய்யவல்ல சித்தனே, சிவனே, யாவராலும் விரும்பப் படுபவனே, ஞான நாதனே, புதிய தொண்டனாகிய யான் மற்றவர்களைப் போல மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் சிறந்த வாழிடமாக எண்ணுகின்றேனில்லை; மதங் கொண்ட யானை போன்று அகங்காரத்தை ஒழித்து எல்லா உலகமும் இனிது வாழ்க வென்று எண்ணி ஒழுகுகின்றேன் ஆதலால் உன்னையே நம்பியிருக்கும் என்னைக் கைவிடலாகாது, காண். எ.று.
சி்வபிரானுடைய திருமேனி பொன்னிறம் உடையதாதலால், “செம்பொனே” எனப் புகழ்கின்றார். திருவருளே திருமேனியாகக் கொண்டு தெய்வங்களிடையே சிறந்து விளங்குதலால், “கருணைத் தெய்வமே” எனப் போற்றுகின்றார். இறைவனால் ஆகாதது யாதும் இன்மையின் “எல்லம் வல்ல சித்தனே” என்று கூறுகின்றார். நம்பன் - விரும்பப் படுபவன். மண்ணும் விண்ணுமாகிய உலகில் வாழ்கின்ற மக்களும் தேவரும் மண்ணியல் வாழ்வையும் தெய்வ வாழ்வையும் பெருமையும் புகழும் உடையதாக எண்ணி விரும்புகின்றார்களாதலால், “பிறர் போல் வையமும் வானும் மற்றவும் மதித்திலேன்” என மொழிகின்றார். உம்பல் - யானை. மதம் கொண்ட யானை அகங்காரமே வடிவமாக யிருப்பதால் அதனையுவமம் செய்கின்றார். காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சிரியம் ஆகிய குற்ற வகைகளில் செருக்கு எனப்படும் மதம் காரணமாக மக்கள் உள்ளத்தில் அகங்காரம் தோன்றிக் குற்றம் பல செய்விக்கும் ஆதலால், “மதஞ்சார் அகங்காரம் தவிர்த்து” என்றும், தம்மோடு வாழும் உலகத்தவர் வாழ்ந்தாலன்றித் தமக்கு வாழ்வில்லை யென்ற உண்மை விளங்க உரைத்தலால். “எல்ல உலகமும் வாழ்க வென்றிருந்தேன்” என்றும் இயம்புகின்றார்.
இதனால், தன்னைக் கைவிடலாகாமைக் குரிய காரணம் காட்டி அபயம் வேண்டியவாறாம். (8)
|