3563. படம்புரி பாம்பிற் கொடியனேன் கொடிய
பாவியிற் பாவியேன் தீமைக்
கிடம்புரி மனத்தேன் இரக்கம்ஒன் றில்லேன்
என்னினும் துணைஎந்த விதத்தும்
திடம்புரி நின்பொன் அடித்துணை எனவே
சிந்தனை செய்திருக் கின்றேன்
நடம்புரி கருணை நாயகா உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.
உரை: படம் விரிக்கும் பாம்பினும் கொடியவனாகிய யான் கொடிய பாவிகளில் பெரும் பாவி யாவேன்; தீமைக் கெல்லாம் இடமாகிய மனத்தை யுடையேன்; இரக்கம் என்பது சிறிதும் இல்லாதவனாயினும் எந்த விதத்தும் வன்மை மிக்க நினது அழகிய திருவடி யிரண்டுமே துணையாவன என்று சிந்தித்திருக்கின்றேன்; தில்லையம்பலத்தில் திருக்கூத் தாடுகின்ற கருணை யுருவினனாகிய நாயகனாகிய உன்னையே நம்பி யுள்ளேனாதலால், என்னைக் கைவிட லாகாது. எ.று.
படம் விரிக்கும் பாம்பினை ‘நல்ல பாம்பு’ என்பர். அதன் விடம் தீண்டினாரைத் தப்பாமல் கொல்லும் கொடுமை யுடையதாகலின், “படம்புரி பாம்பிற் கொடியனேன்” எனப் பகர்கின்றார். பாவம் மிக வுடைமை புலப்படுத்தற்கு, “கொடிய பாவியிற் பாவியேன்” எனவும், தீய நினைவுகளே நிறைந்த நெஞ்சுடையவன் எனக் குற்ற மிகுதி யுணர்த்தற்கு, “தீமைக்கு இடம்புரி மனத்தேன்” எனவும், இரக்கப் பண்பில்லாதவன் மிகக் கொடிய அரக்கனாகக் கருதப்படுதலின், “இரக்கம் ஒன்றில்லேன்” எனவும் இயம்புகின்றார். இப்பெற்றியோர் திருவருட் பேற்றுக் குரிய ரல்ல ரென உரைப்பர். என்பால் இத்தகைய கொடுமை யனைத்தும் உள்ளன வெனினும் என் சிந்தையில் என் உயிர்க்குத் துணையாவது நினது திருவடி ஒன்றே என்ற உணர்வு நிலை கொண்டுளது என்பாராய், வடலூர் வள்ளல், “துணை எந்த விதத்தும் திடம்புரி நின் பொன்னடித் துணை யெனவே சிந்தனை செய்திருக்கின்றேன்” என்று தெரிவிக்கின்றார். இறைவன் திருவடி மிக்க வன்மை யுடையது என்பது பற்றி, “திடம்புரி நின் பொன்னடித் துணை” என்று சிறப்பிக்கின்றார். பொன்னடி - அழகிய திருவடி. பல தீமைகள் என்பால் இருப்பினும் திருவடியே துணையாவது எனச் சிந்தித்திருக்கும் எனது இயல்பு கண்டேனும் நீ அபயம் அளித்தல் வேண்டும் என்றற்கு. “உனையே நம்பினேன் கைவிடேல் எனையே” என்று கூறுகின்றார்.தில்லையம்பலத்தில் திருக்கூத்தாடும் சிவபெருமான் ஆதலின், “நடம்புரி கருணை நாயகா” எனப் போற்றுகின்றார்.
இதனால், திருவடியே துணையாவது என்ற நிலைத்த சிந்தனையைக் காரணம் காட்டித் தம்மைக் கைவிட லாகா தென வேண்டியவாறாம். (11)
|