3564.

     படித்தனன் உலகப் படிப்பெலாம் மெய்ந்நூல்
          படித்தவர் தங்களைப் பார்த்து
     நொடித்தனன் கடிந்து நோக்கினேன் காம
          நோக்கினேன் பொய்யர்தம் உறவு
     பிடித்தனன் உலகில் பேதையர் மயங்கப்
          பெரியரில் பெரியர்போல் பேசி
     நடித்தனன் எனினும் நின்னடித் துணையே
          நம்பினேன் கைவிடேல் எனையே.

உரை:

     உலகியல் நூல்கள் எல்லாம் படித்தேன்; அதனோடு நில்லாது மெய்ம்மை சான்ற ஞான நூல்களைப் படித்தவர்களைப் பார்த்து இகழ்வாகப் பேசினேன்; அன்றியும், அவர்களை விலக்கும் கருத்தால் கடுத்து நோக்கினேன்; காம விச்சை கலந்த பார்வை யுடையனாயினேன்: அன்றியும் பொய்யொழுக்கம் உடையவர்களின் உறவு கொண்டு இவ்வுலகில் பேதையராயினார் கேட்டு மயங்குமாறு மிகப் பெரியவர் போல் பேசி நடித்தேன்; என்றாலும், நின் திருவடி யிரண்டையும் விரும்பி யுறைகின்றேனாதலால் என்னைக் கைவிட லாகாது. எ.று.

     உலகியற்கு வேண்டிய அரசியல் பொருளியல் முதலிய நூற் படிப்பு, உலகப் படிப்பு எனப்படுதலின், “படித்தனன் உலகப் படிப்பெலாம்” என உரைக்கின்றார். ஆகமங்கள் பயிலும் சாத்திரப் படிப்பை “மெய்ந்நூல்” என்று கூறுகின்றார். அவைகள் என்றுமுள்ள இறைவனைப் பற்றியும், உயிர்களைப் பற்றியும், உலகைப் பற்றியும், இம்மூன்றற்கு உள்ள தொடர்புகளையும், காரண காரிய முறையில் ஆராய்வனவாதலின், உலகியற்கு இன்றியமையாத பொருளறிவும் தொழிலறிவும் பிறவும் நல்காமை பற்றி, அவற்றைப் பயின்றோரைப் புறக்கணிக்கும் குறிப்புடன் நோக்கினமை தோன்ற, “மெய்ந்நூல் படித்தவர் தங்களைப் பார்த்து நொடித்தனன்” என்றும், “கடிந்து நோக்கினேன்” என்றும் கூறுகின்றார். கடிதல் - விலக்குதல்; புறக்கணித்தலுமாம். காம நோக்கு - காம விச்சையுடன் மகளிரைப் பார்த்தல். பொய்யர் - பொய் கூறுபவர்; பொய்யொழுக்க முடையவருமாம். நல்லறி வில்லாத பேதை மக்கள் எளிதில் அறிவு மயங்குவராதலால், அவர் முன்னே மிக்க பெரியோர் போலச் சொல்லாலும் தோற்றத்தாலும் ஒழுகினமை புலப்பட, “உலகில் பேதையர் மயங்கப் பெரியரிற் பெரியர் போலப் பேசி நடித்தனன்” என வுரைக்கின்றார். இவை யாவும் பெரிய குற்றச் செயல்களாயினும் இவற்றிடையே நினது திருவடியை மறவாது நம்பி யிருந்தேன் என்பாராய், “நின்னடித் துணையே நம்பினேன் கைவிடேல் எனையே” என்று கூறுகின்றார்.

     இதனால், உலகப் படிப்பும் மெய்ந்நூல் படிப்பவரை யிகழும் குறிப்பும் பிற குற்றங்களும் உடையனாதல் பற்றித் தம்மை கைவிட லாகா தென வேண்டியவாறாம்.

     (12)