3565. பஞ்சுநேர் உலகப் பாட்டிலே மெலிந்த
பாவியேன் சாவியே போன
புஞ்செயே அனையேன் புழுத்தலைப் புலையேன்
பொய்யெலாம் பூரித்த வஞ்ச
நெஞ்சினேன் பாப நெறியினேன் சினத்தில்
நெடியனேன் கொடியனேன் காம
நஞ்சினேன் எனினும் அஞ்சினேன் உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே.
உரை: உலகியல் துன்பத்திலே பஞ்சு போல அலைந்து மெலிந்த பாவியாகிய யான், சாவியான புன்செய் நிலத்தைப் போன்றுளேன்; பேன் நிறைந்த தலையையுடைய புலையேன்; பொய்யே மிக நிறைந்த வஞ்ச நெஞ்சினை யுடையவன், பாவ நெறியிலேயே ஒழுகுபவன், மாறாது நெடிது நிற்கும் சினமுடையவன், கொடியவன், காம வுணர்வாகிய விடத்தை யுடையவ னென்றாலும், உனக்கஞ்சி உன்னையே நம்பி யுள்ளேனாதலால் என்னைக் கைவிட வேண்டாம். எ.று.
உலகியல் துன்பத்தில் அகப்பட்டு வருந்தும் இயல்பை, “பஞ்சுநேர் உலகப் பாட்டிலே மெலிந்த பாவியேன்” என்று உரைக்கின்றார். ஒருவர் படும் மிக்க துன்பத்திற்குக் காற்றில் பறக்கும் பஞ்சினை யுவமம் கூறுவது மரபு. “நான் படும் பாடு சிவனே, உலகோர் பஞ்சுதான் படுமோ” (அருட்பா) என்பது காண்க. புன்செய் - புஞ்செய் என வந்தது. விதைத்தவை விளையாது கெடுதலைச் ‘சாவி போதல்’ என்கிறார். புழுத்தலை என்ற விடத்துப் புழு, பேன் வகைகளைக் குறிக்கிறது. பூரித்தல் - மிகுதல். தோன்றுகிற சினம் விரைந்து ஆறுவது முறையாக அஃதின்றி நெடிது நீட்டிப்பது அறமன்மையின், “சினத்தில் நெடியனேன்” எனக் கூறுகின்றார். காம விச்சை, நஞ்சு போல் கெடுக்கும் இயல்பிற்றாதலின், “காம நஞ்சினேன்” எனத் தம்மை இழித்துரைக்கின்றார். இக்கூறிய குற்றங்கள் உடைமையை யுணர்தலால் தம்மை இறைவன் கைவிடுவானோ என்று அஞ்சுமாறு புலப்பட, “அஞ்சினேன்” என இயம்புகிறார்.
இதனால், தம்பாலுள்ள குற்றங்களை நினைந்து இறைவன் தம்மைக் கைவிடுவானோ என்று அஞ்சிய திறம் கூறியவாறாம். (13)
|